இபிஎஸ்ஸின் 'இருண்ட' காலம்? அதிமுகவை அதிரவைக்கும் புது பூகம்பம்.. பதவியிலிருந்தே தூக்க முடிவு?
சென்னை: கடந்த நான்கு நாட்களாக அதிமுகவில் அரங்கேறி வரும் அதிரடி காட்சிகள், எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அந்தப் பேரியக்கம் மூன்றாக, நான்காக உடையப்போகிறதா என்ற அச்சத்தைத் தொண்டர்கள் மத்தியில் விதைத்திருக்கிறது. முக்கியமாக எடப்பாடி பழனிச்சாமியின் பொதுச்செயலாளர் பதவி தப்புமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கிளர்ந்தெழுந்த 'கோவை' கைகள்!
இந்தத் தடவை பூகம்பம் வெடித்தது சேலத்தில் அல்ல, கோவையில்! கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடியார் முடிசூட்டிக்கொண்ட போது, அவருக்குத் தோள் கொடுத்த 'கொங்குப் படைத் தளபதி' எஸ்.பி. வேலுமணியே இப்போது அவருக்கு எதிராகத் வாள் உயர்த்தியிருப்பதுதான் அரசியலின் உச்சக்கட்ட ட்விஸ்ட். நேற்று தமிழக சட்டசபையில் நடந்த கூத்துக்களே இதற்குச் சாட்சி.
தமிழக சட்டமன்றத்தில் தவெக (TVK) அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், அடுத்த கட்டமாக எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்க அதிரடி வியூகங்களை வகுத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் திரண்டுள்ள இந்த "அதிமுக மீட்புக் குழு", கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டக் கோரி களம் இறங்கி உள்ளதாம்.
சட்டமன்ற பிளவும், எடப்பாடியின் நடவடிக்கையும்
நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவின் 47 எம்.எல்.ஏ-க்களில் 25 பேர் கட்சித் தலைமைக்கு எதிராக டிவிபி அரசுக்கு ஆதரவளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி பழனிசாமி (EPS), உடனடியாக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை கட்சிப் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும், இவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காய் நகர்த்திவருகிறார்.

பொதுக்குழுவை நோக்கி அதிருப்தியாளர்கள்
இந்த நீக்க நடவடிக்கையைத் துச்சமாக மதிக்கும் சி.வி. சண்முகம் மற்றும் வேலுமணி தரப்பினர், "எங்களுக்கு எடப்பாடி பழனிசாமியை நீக்கவே அதிகாரம் உள்ளது" எனப் போர்க்கொடி தூக்கி உள்ளார்களாம்.
தொடர் தோல்விகள்: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி தலைமையில் கட்சி பலவீனமடைந்து வருவதாகவும், வாக்கு வங்கி சரிந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு.
உட்கட்சி ஜனநாயகம்: மூத்த தலைவர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக ஈபிஎஸ் மீது புகார்.
பொதுக்குழு அதிகாரம்: கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறும் அதிருப்தி அணியினர், உடனடியாகப் பொதுக்குழுவைக் கூட்டி புதிய தலைமையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர்.
வேலுமணியின் தேர்தல் கணக்கு
மேற்கு மண்டலத்தின் முகமாக அறியப்படும் எஸ்.பி. வேலுமணி, எடப்பாடியின் கோட்டையிலேயே ஓட்டையைப் போட்டுள்ளார். "கட்சியைப் பாதுகாக்கவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். தொண்டர்களின் விருப்பம் ஒரு வலுவான தலைமை அமைய வேண்டும் என்பதே. அதற்கான முதல் படி, எடப்பாடியை நீக்குவதுதான்," என அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறி வருகிறாராம்..
சட்டப் போராட்டமும் - அரசியல் களமும்
தற்போது அதிமுகவில் நிலவும் இந்தச் சூழல், 1988 மற்றும் 2017-ல் ஏற்பட்ட பிளவுகளை நினைவூட்டுகிறது. எடப்பாடி பழனிசாமி ஒருபுறம் சட்ட ரீதியாகத் தகுதி நீக்க நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தினாலும், மறுபுறம் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கட்சியின் சட்ட விதிகளைப் பயன்படுத்திப் பொதுக்குழுவை கூட்டத் தயாராகி வருகின்றனர்.
ஏற்கனவே சசிகலா மற்றும் ஓபிஎஸ் (OPS) விவகாரத்தில் சட்டப் போராட்டங்களைச் சந்தித்த அதிமுக, இப்போது 25 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய மாவட்டச் செயலாளர்களின் எதிர்ப்பால் மிகப்பெரிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
"அம்மா கட்டிக்காத்த இயக்கம் ஒரு சிலரின் அதிகாரப் பசியால் அழியக் கூடாது" என்று கூறிக்கொண்டு, சி.வி. சண்முகம் தலைமையிலான குழுவினர் மாவட்ட வாரியாகத் தொண்டர்களைத் திரட்டத் தொடங்கியுள்ளனர். இதனால் வரும் நாட்களில் அதிமுகவில் மேலும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications