ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்!
சென்னை: பிளவும் அதிமுக மீண்டும் இணைந்து விட்டதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் அறிவித்திருந்தாலும், கட்சிக்குள் பரபரப்பு இன்னும் ஓயவில்லை. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தனித் தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என்ற தகவல் அதிமுகவில் பரபரப்பை மீண்டும் அதிகரித்துள்ளது.
எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியினர் நேற்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கி மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். அதன் பின்னர், சபாநாயகரிடம் அளிக்கப்பட்டிருந்த புகார்களையும் இரு அணிகளும் வாபஸ் பெற்றன.
இதன்மூலம் அதிமுகவில் இருந்த உட்கட்சி மோதல் முடிவுக்கு வந்துவிட்டது போல ஒரு தோற்றம் உருவானது. ஆனால், இந்த இணைப்பு நிகழ்வில் முக்கியமாக கவனிக்கப்பட்ட விஷயம் என்னவென்றால், சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொள்ளாததே.

அதிமுக
எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எடப்பாடி இல்லத்துக்குச் சென்ற போதும், இந்த இருவரும் புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை சமாதானப்படுத்த தங்கமணி மற்றும் எஸ்.பி.வேலுமணி நேரில் சென்று பேசியும் அவர் சம்மதிக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. "மீண்டும் இபிஎஸ்ஸிடம் சென்று மண்டியிட முடியாது" என்ற மனநிலையில்தான் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சி.விஜயபாஸ்கர்
இதேபோல், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது அடுத்த அரசியல் முடிவு குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். விராலிமலையில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் அவர் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், "அதிமுகவில் தொடரலாமா? அல்லது புதிய அரசியல் பாதையை தேர்வு செய்யலாமா?" என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிசாமியின் ஆதிக்கம் முழுமையாக நிலவுகிறது.
அதிருப்தியில் சீனியர்கள்
கட்சிக்குள் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு முக்கியத்துவம் குறைந்து வருவதாகவும், முடிவெடுக்கும் அதிகாரம் முழுவதும் ஒரே தரப்பில் குவிந்துவிட்டதாகவும் சில முன்னாள் அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதும், எதிர்காலத்தில் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைந்து வருகிறது என்ற மனநிலையும் சில அதிமுக தலைவர்களிடையே உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகம்
"இனி அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியுமா?" என்ற சந்தேகமும் பலரிடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில்தான், தமிழக வெற்றிக் கழகம் பக்கம் பல அதிமுக தலைவர்கள் நகர்ந்து வருவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே செங்கோட்டையன், வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிராபகர் உள்ளிட்ட சில முக்கிய முகங்கள் தவெக பக்கம் சென்றுவிட்டனர். மேலும் 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததும் அரசியல் சூழலை முற்றிலுமாக மாற்றியுள்ளது.
ஆதவ் அர்ஜுனா
இந்த நிலையில், "இன்னொரு அதிமுகவாக தவெக மாறி வருகிறது" என்ற கருத்தையும் தவெக நிர்வாகிகள் முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியதாக சொல்லப்படும் "புதிய அதிமுக" என்ற வரி தற்போது அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசப்படுகிறது. இதன் பின்னணியில்தான், சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தவெகவில் இணையலாம் என்ற தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன.
எம்எல்ஏ பதவி ராஜினாமா
குறிப்பாக, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணையலாமா என்பது குறித்து சி.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களிடமே கருத்து கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் குறித்து இதுவரை இருவரும் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேநேரம், அவர்கள் இன்னும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காததும், தனித்தனியாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதும் அரசியல் சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
சி.வி.சண்முகம்
ஒருவேளை இந்த இருவரும் உண்மையிலேயே அதிமுகவிலிருந்து விலகினால், அது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படும். ஏனெனில், இருவருமே கட்சியின் முக்கிய முகங்களாக இருந்தவர்கள். குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய தமிழகத்தில் வலுவான ஆதரவு வட்டாரங்களை கொண்டவர்கள். இதனால், சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கரின் அடுத்த முடிவு என்ன? அவர்கள் அதிமுகவில் தொடர்வார்களா? அல்லது விஜய் தலைமையிலான தவெகவில் புதிய அரசியல் பயணத்தை தொடங்குவார்களா? என்பதுதான் தற்போது தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications