அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்.. சாலையை மறித்த ஜெயக்குமார்.. கைது செய்த போலீஸ்.. என்ன நடந்தது?
செங்கல்பட்டு: அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சித்த 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், திடீரென அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அதிமுக செயலாளர் தினேஷ்குமார். இவரின் மனைவி சுமிதா பேரூராட்சி 12ஆவது வார்டு உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வினோத், அப்பு உள்ளிட்டோர் பிப்.25ஆம் தேதியன்று இரவு பேரூராட்சிக் கழகச் செயலாளர் தினேஷ்குமாரை கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

அதிமுக ஆர்ப்பாட்டம்
இதைத் தடுக்க முயற்சித்துள்ள மோகன் என்பவரையும் கடுமையாகத் தாக்கினர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், தினேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி, தக்க தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அனுமதிக்காத போலீஸ்
இந்த சம்பவத்தை கண்டித்து, திமுக அரசின் கவனமின்மையை கண்டித்தும் அதிமுக தரப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அதிமுக தரப்பில் திருக்கழுக்குன்றம் பகுதியில் நடத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை.
போலீசார் குவிப்பு
இருந்தாலும் அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று தகவல் வெளியாகியது. அதற்கேற்ப அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் திருக்கழுக்குன்றத்திற்கு ஆர்ப்பாட்டம் நடத்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வந்தார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300க்கும் அதிகமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.
ஜெயக்குமார் கைது
இதனைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருந்தாலும் ஆர்ப்பாட்டம் நடத்த ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்டோர் முயற்சித்தனர். இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறை கைது செய்ய முயற்சித்த போது, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications