எஸ்பி வேலுமணி அணியில் முதல் விக்கெட்? எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வரும் கேசி வீரமணி? உருக்கமான பேச்சு
திருப்பத்தூர்: அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் எஸ்பி வேலுமணி அணியில் இருந்து விஜய்யின் தவெகவிற்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித்த கேசி வீரமணி திடீரென்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசி உள்ளார். இதனால் அவர் அணி மாறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக மொத்தம் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மீண்டும் அதிமுகவால் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இதையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை சரியில்லை என்று கூறி முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்த அணியில் மொத்தம் 25 எம்எல்ஏக்கள் இருந்தனர்.
மறுபுறம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 22 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதில் எஸ்பி வேலுமணி அணியில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் ஆளும் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டசபையில் நம்பிக்கை கோரிய விஜய்யின் தீர்மானத்திற்கு எஸ்பி வேலுமணி அணியின் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். எடப்பாடி பழனிச்சாமி உள்பட அவரது அணியில் உள்ள 22 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர்.
இந்நிலையில் தான் தற்போது எஸ்பி வேலுமணியின் அணியில் இருக்கும் ஒரு எம்எல்ஏ எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் தான் முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி. இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவாகி உள்ளார். இவர் எஸ்பி வேலுமணியின் அணியில் செயல்பட்டு வந்தார். விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்தார்.
இதையடுத்து கேசி வீரமணியின் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். கேசி வீரமணி திருப்பத்தூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார். இந்த பதவியில் இருந்து கேசி வீரமணியை, எடப்பாடி பழனிச்சாமி நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். இந்த பொறுப்புக்கு
அதிமுக மாநில மருத்துவரணி செயலாளராக இருந்த பசுபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று கேசி வீரமணி வாணியம்பாடியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்தார். பிறகு அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்தார்.
அப்போது கேசி வீரமணி பேசும்போது, ''நான் 20 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்ட செயலாளராக நான் பணியாற்றிவிட்டேன். எனக்கு கட்சி தான் முக்கியம். நீங்கள் தான் முக்கியம். ன் பார்க்காத பதவியில்லை. யாருக்கும் கிடைக்காத அளவுக்கு எனக்கு பதவி கிடைத்துள்ளது. எல்லா பதவியையும் நான் அனுபவித்து விட்டேன். மாவட்ட செயலாளர் முதல் அமைச்சர் வரை ஆகிவிட்டேன்.
இப்போது மாவட்ட செயலாளராக பசுபதி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். தேர்தலில் நம்முடைய கட்சி ஆட்சியை பிடிக்கவில்லை. தேர்தலில் நான் வெற்றி பெற்று இருந்தாலும் வரும் காலத்தில் தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் ஆளும் கட்சியின் ஆதரவு வேண்டும்.
இதனால் தான் ஆளும் கட்சியான தவெகவிற்கு ஆதரவு அளித்தேன். தவெகவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினர். இந்த நிர்பந்தத்தால் ஆதரவு அளித்துவிட்டு விட்டேன். இனி வரும் காலங்களில் எனது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தான் இருப்பார்'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் எஸ்பி வேலுமணியின் அணியில் இருந்து கேசி வீரமணி பிரிந்து எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு ஆதரவாக மாறுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கேசி வீரமணி திருப்பத்தூர் மாவட்டத்தில் முக்கிய அதிமுக தலைவர் ஆவார். இவர் கடந்த 2011, 2016 ஆகிய சட்சடபை தேர்தல்களில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் வெறும் 1,091 வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் தேவராஜ் வசம் கேசி வீரமணி வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். இந்த முறை மீண்டும் கேசி வீரமணி வெற்றி பெற்றுள்ளார். கேசி வீரமணி மொத்தம் 78,633 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய விஜய்யின் தவெக வேட்பாள் 62,550 வாக்குகள் மட்டுமே பெற்று 16,083 ஓட்டுகள் வித்தியாசத்தில் கேசி வீரமணி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications