அரவிந்த் கெஜ்ரிவாலும், அதே இடத்தில் உட்கார்ந்திருக்கும் விஜயகாந்த்தும்!
சென்னை: எந்த செயலுக்கும் ஒரு இலக்கு இருக்க வேண்டும் என்பார்கள். இலக்கு இல்லாத எதுவுமே முழுமை பெறாது, முடிவு பெறாது, வெல்லவும் முடியாது. இப்படி இலக்கு இல்லாத பயணத்தால்தான் எந்த இடத்தில் புறப்பட்டாரோ அதே இடத்தில் தொடர்ந்து நின்று கொண்டிருக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
கிட்டத்தட்ட அரவிந்த் கெஜ்ரிவால், விஜயகாந்த் ஆகிய இருவரையும் ஒப்பிட்டுச் சொல்லலாம். இருவருமே புதிய புயலைக் கிளப்பியவர்கள். பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியவர்கள். மிகக் குறைந்த காலத்தில் படு வேகமாக உச்சாணிக்குப் போனவர்கள்.
ஆனால் கெஜ்ரிவால் வென்றார்.. விஜயகாந்த் இன்னும் கிளம்பிய இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறார். இதுதான் இருவருக்கும் இடையிலான பெரிய வித்தியாசம். டெல்லிக்கும், தமிழகத்திற்கும் வித்தியாசம் இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறதுதான், ஆனால், கெஜ்ரிவாலிடம் இலக்கு இருந்தது, கொள்கை இருந்தது. இதனால் அவர் வென்றார். ஆனால் முதல்வர் பதவியை அடைய வேண்டும் என்ற இலக்கு மட்டுமே விஜயகாந்த்திடம் இரு்பபதால் அவரால் வெல்ல முடியாத நிலை.

விழிகளை விரிய வைத்தவர்
விஜயகாந்த் 2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அனைவரையும் வியப்படைய வைத்தவர். கட்சி தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே 8.4 சதவீத ஓட்டுக்களைப் பெற்று அவரது தேமுதிக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

பாமகவின் அத்தியாயம் முடிந்தது
அதுவரை வாக்குகளைப் பிரிக்கும் முக்கியக் கட்சியாக பாமக மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது. அந்த இடத்தை அந்தத் தேர்தல் மூலம் கைப்பற்றியது விஜயகாந்த்தின் தேமுதிக.

மக்கள் வைத்த நம்பிக்கை
விஜயகாந்த் பேச்சோடு நில்லாமல் செயல்பாட்டிலும் வேகமாக இருக்கிறார் என்று மக்கள் நம்ப ஆரம்பித்தனர். குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் தங்களைக் காக்க வந்த புதிய சக்தி போல விஜயகாந்த்தைப் பார்க்க ஆரம்பித்தனர்.

ஆனால்!
ஆனால் அதன் பிறகு விஜயகாந்த்தின் வளர்ச்சி என்பது குறிப்பிட்டுச் சொல்ல முடியாத நிலைக்குப் போய் விட்டது. அவர் உண்மையில் எங்கு புறப்பட்டாரோ அதே இடத்தில்தான் இன்னும் நின்று கொண்டிருக்கிறார்.

கெஜ்ரிவால்
மறுபக்கம் கெஜ்ரிவால் கதையை எடுத்துக் கொள்ளலாம். இவரும் விஜயகாந்த் போலத்தான். வந்த வேகத்தில் விஸ்வரூபத்தைக் காட்டினார். டெல்லியின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

காரணம்.. கொள்கை
கெஜ்ரிவால் உயர்ந்த நிலையில் விஜயகாந்த் மட்டும் ஏன் உயர முடியவில்லை என்று கேட்டால் பல காரணங்களைக் கூறலாம். அதில் முக்கியமானது கெஜ்ரிவாலிடம் இலக்கு, கொள்கை இருந்தது. விஜயகாந்த்திடம் அது இல்லை.

விட்டுக் கொடுக்காதவர் கெஜ்ரிவால்
கெஜ்ரிவால் ஆரம்பத்தில் என்ன சொன்னாரோ அதிலிருந்து கடைசி வரை வழுவவில்லை. ஆரம்பத்திலிருந்தே ஒரே நிலைப்பாடுதான். தனது கொள்கையை விட்டு்க கொடுக்காதவர் கெஜ்ரிவால். இதனால்தான் ஆட்சியை விட்டு விலகி மீண்டும் தேர்தலைச் சந்தித்தபோது அவருக்கு டெல்லி மக்கள் ஏகோபித்த வரவேற்பை கொடுத்து கெளரவம் கொடுத்தனர்.

விஜயகாந்த்திடம் எதுவுமே இல்லை
ஆனால் விஜயகாந்த் அப்படி இல்லை. ஆரம்பத்தில் இருந்த வேகம் இப்போது இல்லை. ஆரம்பத்தில் அவர் பலருக்கும் நம்பிக்கை அளித்தார். அத்தனையும் இப்போது போய் விட்டது. வித்தியாசமான அரசியல்வாதியாக இருப்பார் என்று நம்பப்பட்ட அவர் இன்று இருப்பதிலேயே மிகப் பெரிய "பேர" அரசியல்வாதியாக மாறிப் போயிருக்கிறார்.

திமுக, அதிமுகவைத் தாண்டி
டெல்லியில் கெஜ்ரிவால் சுலபமாக ஆட்சியைப் பிடிக்க முடிந்ததற்கு சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் விஜயகாந்த்தால் அவ்வாறு முடியாமல் போனதற்கு பல காரணங்கள். அதில் முக்கியமானது திமுக, அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளைத் தாண்டி யாரும் இன்னும் உருவாகவில்லை என்பது.

தகர்த்தெறிய தவறினார்
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தேமுதிகவை மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் அதை விஜயகாந்த் சரியாக பயன்படுத்திக்கொள்ளத் தவறி விட்டார். தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டோ அல்லது மக்கள் ஆதரவைப் பெறும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபட்டோ அவர் தன்னை ஒரு மாபெரும் சக்தியாக மாற்றிக் கொள்ளத் தவறி விட்டார்.

2 தேர்தலில் கிடைத்ததை வைத்து பேரம்
2 தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டதால் தேமுதிகவுக்கென்று ஒரு தனி வாக்கு வங்கி உருவானது. இதை வைத்து பிற கட்சிகளுடன் பேரம் பேச ஆரம்பித்து விட்டார். யாரால் அவர் தனிக் கட்சி ஆரம்பித்தாரோ அதே திமுகவுடன் கூட்டணிக்குப் பேசினார். அது சரிப்பட்டு வராததால் அதிமுகவுடன் போய் கூட்டணி வைத்தார். இதுதான் விஜயகாந்த்துக்கு ஏற்பட்ட முதல் சறுக்கல்.

கெட்ட பெயர்
அதைத் தொடர்ந்து விஜயகாந்த்துக்கு தொடர்ந்து கெட்ட பெயர் ஏற்படத் தொடங்கியது. கோபக்காரராக அவர் மக்கள் பார்வையில் காட்சி அளிக்க ஆரம்பித்தார். இவரும் பத்தோடு பதினொன்று என்று பார்க்கப்பட்டார். சாதனை படைத்திருக்க வேண்டிய அவர் சாதாரண அரசியல்வாதியாக மாறிப் போனார்.

ஜெயலலிதாவுடன் சேர்ந்ததால்
என்னதான் விஜயகாந்த்தும், பிரேமலதா விஜயகாந்த்தும், தேமுதிகவும் ஜெயலலிதாவைத் திட்டினாலும் கூட, அதிமுகவுடன் வைத்த கூட்டணியால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்துக்காவது தேமுதிக உயர முடிந்ததே தவிர, அது இல்லாமல் போயிருந்தால் இந்த அளவுக்கு உயர்வு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

வாக்கு வங்கி சரிந்தது
வெறும் ரசிகர் மன்றக் கூட்டத்துடன் கட்சி தொடங்கி 8 சதவீத வாக்குகளைப் பெற்ற தேமுதிகவுக்கு 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது அது ஐந்து சதவீதமாக சரிந்து போனது. அப்போது அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தார்.

நகரக் கூட முடியவில்லை
உண்மையில் 2006ம் ஆண்டு கட்சி தொடங்கிய விஜயகாந்த்தால் பெரிய அளவில் சாதனை என்று எதையும் செய்ய முடியாத நிலை. வெறும் வாக்கு வங்கியை மட்டும் வைத்துக் கொண்டு, அதை மூலதனமாக மாற்றி பேர அரசியலில் விஜயகாந்த் இறங்கியதால் அவரால் முன்னேற முடியாமல் போனது.

நடுநிலையாளர்கள் அதிருப்தி
உண்மையில் பெண்கள், நடுத்தர வர்க்கத்தினர், திமுக, அதிமுகவை அடியோடு வெறுப்பவர்கள் என பல தரப்பினரும் விஜயகாந்த்தைப் பெரிதும் நம்பினர். மாற்றத்தை ஏற்படுத்துவார் என நம்பப்பட்ட அவர் அனைவரையும் ஏமாற்றி விட்டார் என்பதே உண்மை.

இருந்த பெயரும் போனது
இதுவரை 2 கூட்டணியில் இடம் பிடித்து விட்டார் விஜயகாந்த். முதலில் அதிமுக, பின்னர் பாஜக. வரும் சட்டசபைத் தேர்தலில் அவர் திமுகவுடன் இணைவார் என்று கருதப்பட்டது. ஆனால் கடைசியில் ஜகா வாங்கி விட்டார். இதுதொடர்பாக நடந்த பேரங்கள் குறித்த செய்திகள் விஜயகாந்த்தின் பெயரை மேலும் ரிப்பேராக்கி விட்டன என்பதே உண்மை.

என்னதான் வேண்டும்
உண்மையில் விஜயகாந்த் என்ன மாதிரியான அரசியல் செய்கிறார் என்றே யாருக்கும் புரியவில்லை அவரது நோக்கம் அதிக இடங்களில் போட்டியிடுவதா, ஆட்சியைப் பிடிப்பதா என எதுவுமே புரியவில்லை. அதாவது மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட எந்தவொரு இலக்கும் அவரிடம் காணப்படவில்லை. அவரது கட்சிக்கு மக்கள் முதல் தேர்தலில் கொடுத்த அங்கீகாரமே இவர் வித்தியாசமானவராக இருப்பார் என்ற நம்பிக்கையில்தான் என்பதை இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது.

மீண்டும் தனிப் பாதையில்.. ஆனால் பலன்?
இப்போது மீண்டும் தனித்துப் போட்டி என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார் (ஆனால் அவரது மனைவியோ யார் வேண்டுமானாலும் வந்து பேசலாம் என்று சொல்லியிருக்கிறார்). ஆனால் முதல் இரு தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு வங்கியை உருவாக்கிய விஜயகாந்த் தொடர்ந்து அதைச் செய்து வந்திருந்தால், ஆக்கப்பூர்வமான அரசியல்வாதியாக செயல்பட்டிருந்தால் இந்தத் தேர்தலில் அவர்தான் முதல்வராகியிருக்கக் கூடும். ஆனால் இடையில் சுயநல அரசியலுக்கு மாறி விட்டு இப்போது மீண்டும் தனித்துப் போட்டி (அதைக் கூட உறுதியாக சொல்லவில்லை தேமுதிக) என்று கூறியிருப்பதை மக்களே நம்பவில்லை.

கஷ்ட காலம்
உண்மையில் விஜயகாந்த்தின் எதிர்காலம் இனி கஷ்ட காலம் என்றே அரசியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள். இதேபோல அவர் மெத்தனமாக அரசியல் செய்து வந்தால், சுயநலமாக செயல்பட்டு வந்தால், தன்னை நம்பி வாக்களித்தவர்களின் வாக்கு சதவீதத்தை வைத்து பேரம் பேசி வந்தால் நிச்சயம் இன்னொரு உப்புக்குச் சப்பாணி அரசியல்வாதியாக விஜயகாந்த் மாறும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications