ஆர்.கே.நகரில் வேட்புமனு நிராகரிப்பு.. சாலை மறியலில் ஈடுபட்ட சமகவினர் கைது
வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை கண்டித்து திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட சமகவினரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்த சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து அக்கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஜெயலலிதா மறைவை அடுத்து ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதியில் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களை கடந்த 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 127 வேட்பாளர்கள் தாக்கல் செய்தனர். அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பூசலால் கொடி, சின்னம் ஆகியவற்றைத் தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது. சசிகலா அணி வேட்பாளர் டிடிவி தினகரன், 'தொப்பி' சின்னத்திலும் பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், 'மின்கம்பம்' சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் சமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அந்தோணி சேவியரை வேட்பாளராக சரத்குமார் அறிவித்தார். கடைசி நாளான நேற்று அந்தோணி சேவியர் வேட்பு மனுவை தாக்கல்செய்தார்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற்ற நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் வேட்பாளர் அந்தோணி சேவியர், மாற்று வேட்பாளர் கே.விஜயன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த 10 பேர் வேட்புமனுவை முன்மொழியாததால் நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தனது மனுவை மீண்டும் பரிசீலனை செய்யுமாறு அந்தோணி சேவியர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சமத்துவ மக்கள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சமகவினரை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் தமிழ்நாடு இளைஞர் கட்சியினரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களும் போலீசார் கைது செய்யப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications