இலங்கை மனித உரிமைகள் பற்றி சர்வதேச விசாரணை: ஆம்னஸ்டி வலியுறுத்தல்
சென்னை: இலங்கையில் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சர்வதேச பொதுமன்னிப்பு சபையின் இந்திய பொறுப்பாளர் அனந்த் பத்மநாபன் கூறுகையில்,
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய சர்வதேச விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். போரின்போது இரு தரப்பினரும் செய்த மனித உரிமை மீறல் பற்றிய தகவல்கள் எங்களுக்கு நாள்தோறும் வந்து கொண்டிருக்கிறது என்றார்.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் மசோதாவை வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக இது குறித்து நவநீதம்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டுள்ளன. இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். அதனை மற்ற நாடுகள் கண்காணிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நவநீதம் பிள்ளை பாரபட்சத்துடன் செயல்படுவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications