அன்புமணி டிஸ்மிஸ்- பாமக பொருளாளர் கடும் எதிர்ப்பு- ராமதாஸுடன் ஆதரவாளர்கள் நேருக்கு நேர் மோதல்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸை டிஸ்மிஸ் செய்ததை ஏற்க முடியாது என்று அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா அறிவித்துள்ளார். பாமகவின் புதிய தலைவராக டாக்டர் ராமதாஸ், தாமே பொறுப்பேற்க அறிவித்ததையும் ஏற்க முடியாது என்கிறார் திலகபாமா. மேலும் பாமகவில் ஜனநாயகத்தை டாக்டர் ராமதாஸ் படுகொலை செய்துவிட்டதாகவும் திலகபாமா குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸ் வீடு முன்பாக அன்புமணியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்; அப்போது டாக்டர் ராமதாஸுடன் அன்புமணி ஆதரவாளர்கள் நேருக்கு நேராக வாக்குவாதம் செய்ததால் பதற்றம் நிலவுகிறது.

பாமக தலைவர் பதவியில் இருந்து டாக்டர் அன்புமணி ராமதாஸை அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ் திடீரென டிஸ்மிஸ் செய்தார். மேலும் அன்புமணி ராமதாஸ், இனி பாமகவின் செயல் தலைவர் மட்டுமே; பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக தாமே செயல்படுவேன் என்றும் அறிவித்தார் டாக்டர் ராமதாஸ்.
டாக்டர் ராமதாஸின் இந்த அறிவிப்பு பாமகவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. டாக்டர் ராமதாஸின் முடிவுக்கு பாமகவின் பொருளாளரான திலகபாமா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திலகபாமா கூறுகையில், பாமகவில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுவிட்டது. டாக்டர் ராமதாஸ் இதுவரை எடுத்த அனைத்து முடிவுகளும் சரியானதுதான். டாக்டர் ராமதாஸ் காட்டிய அன்பை ருசித்தவள் நான். ஆனால் அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் நீக்கியதை எங்களால் ஏற்க முடியாது என்றார்.
மேலும் திண்டிவனத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் வீடு முன்பாக, அன்புமணியின் ஆதரவாளர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராட்டம் நாடத்தி வருகின்றனர். பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் சிலர் டாக்டர் ராமதாஸுடன் நேருக்கு நேராக, அன்புமணியை டிஸ்மிஸ் செய்ததற்கு எதிராக வாக்குவாதம் செய்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications