ரஜினி இன்னும் 50 வருடத்திற்கு இப்படியேதான் பேசிட்டிருப்பார்.. அன்புமணி நக்கல்!
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கடந்த 20 ஆண்டுகளாக பேசி வருகிறார். அடுத்த 50 ஆண்டுகளுக்கும் இதையே பேசுவார் என்று அன்புமணி ராமதாஸ் கிண்டலடித்துள்ளார்.
மதுரை: நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அரசியல் ஆதாயத்திற்காக சிலர் தன்னை சந்தித்ததாகவும் அதனை தான் ஏற்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும், அரசியலுக்கு வர வேண்டும் என இறைவன் விரும்பினால் வருவேன் என்றும் அந்த நேரத்தில், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை அருகில் சேர்க்க மாட்டேன் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், நடிகர் ரஜினிகாந்த் 20 ஆண்டுகளுக்கு மேல் அரசியலுக்கு வருவதாக பேசி வருகிறார் என்றும் அடுத்த 50 ஆண்டுகளுக்கும் இதையேதான் பேசுவார் என்று கிண்டலடித்துள்ளார்.
இதனிடையே, அண்மையில் பாஜகவில் சேர்ந்த இசையமைப்பாளர் கங்கை அமரன், ரஜினி அரசியலுக்கு வருவதைத்தான் சூசகமாக தெரிவித்துள்ளார் என்றும், அவருக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் தமிழிசை, ரஜினிகாந்த் தனிநபராக இருந்து எதனையும் சாதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது அவர் விருப்பம் என்றும் பாஜக அவரை வைத்து தமிழகத்தில் காலூன்றத் துடிக்கிறது என்றும் கூறியுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications