For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிவகாசி தீ விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம்: அன்புமணி குற்றச்சாட்டு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சிவகாசி தீ விபத்து குறித்து உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும் எனவும் தீ விபத்துக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் பட்டாசு கடையில் இன்று பிற்பகலில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்; 14 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன்.

Anbumani ramadoss seeks compensation for sivakasi fire accident victims

இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் முழுமையாக நலம் பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிவகாசியில் 8 பேர் உயிரிழக்கக் காரணமான இந்த நிகழ்வை விபத்து என்று கூறுவதை விட அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த கொலைகள் என்று கூறுவது தான் மிகவும் சரியானதாக இருக்கும்.

சிவகாசி - விருதுநகர் புறவழிச் சாலையில் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த பட்டாசுகளை இரு ஊர்திகளில் ஏற்றிக்கொண்டிருக்கும்போது பட்டாசுகளில் உராய்வு ஏற்பட்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கிடங்கில் இருந்த பட்டாசுகளும், ஊர்தியில் ஏற்றப்பட்ட பட்டாசுகளும் முழுமையாக வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ அருகிலுள்ள தேவகி ஸ்கேன் மையத்திற்கும் பரவியதில் அங்கு மருத்துவம் மற்றும் ஸ்கேன் செய்வதற்காக வந்திருந்த நோயர்களில் 8 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் 14 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் 15 இருசக்கர ஊர்திகள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட வாகனங்களும் எரிந்து சாம்பலாயின.

நோயாளிகள் மருத்துவம் பெறும் மருத்துவமனைகள் மற்றும் ஸ்கேன் மையங்களில் வாகனங்கள் ஒலி எழுப்புவதற்கே தடை செய்யப்பட்டுள்ள நிலையில், டன் கணக்கில் சக்தி வாய்ந்த பட்டாசுகளை கிடங்குகளில் இருப்பு வைப்பதற்கு அதிகாரிகள் எவ்வாறு அனுமதி அளித்தார்கள் எனத் தெரியவில்லை. பொதுமக்கள் வாழும் பகுதிகளில் பட்டாசு மற்றும் வெடி மருந்துகளை தயாரிக்கவும், இருப்பு வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிவகாசியில் இந்த விதிகள் சரளமாக மீறப்படுகின்றன.

இப்போது விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகிலேயே பாரதி காலணியில் உள்ள ஒரு கிடங்கில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடி மருந்துகள் கடந்த ஜூலை 2-ஆம் தேதி வெடித்து சிதறியதில் இருவர் உயிரிழந்தனர். மூவர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் 6 கடைகள் கொண்ட வணிகவளாகம் தரைமட்டமானது, 13வாகனங்கள் எரிந்து சாம்பலானது உட்பட பெருஞ்சேதம் ஏற்பட்டது.

அப்போது விபத்து நடந்த இடத்தை ராமதாஸ் நேரில் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். சிவகாசியில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சட்டவிரோதமாக வெடிமருந்து கிடங்குகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் தடுக்க அத்தகைய கிடங்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் வெடி மருந்துகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். அதை செய்திருந்தால் இப்போது இந்த விபத்து ஏற்பட்டிருக்காது.

ஆனால், அதிகாரிகளின் அலட்சியம், நிர்வாகத்தில் தலைவிரித்தாடும் ஊழல் ஆகியவற்றின் காரணமாக சட்டவிரோத கிடங்குகளில் விபத்துக்கள் ஏற்படுவதும், ஒரு பாவமும் செய்யாத அப்பாவி மக்கள் இந்த விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிவகாசி நகரில் இப்போதும் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான பட்டாசு மற்றும் வெடிமருந்து கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் உடனடியாக அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் வாழும் பகுதிகளிலும், மருத்துவ மையங்களுக்கு அருகிலும் பட்டாசு மற்றும் வெடிமருந்துகளை இருப்பு வைக்க அனுமதி எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது? இதில் ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு ஆகியவை குறித்து பணியிலுள்ள உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் நிதி உதவி வழங்க வேண்டும். இவ்விபத்தில் சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

English summary
PMk youth wing leader Anbumani Ramadoss urges to state government to provide compensation for fire accident victims
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X