கும்பகோணம் பள்ளி தீ விபத்து:அனைவரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து அப்பீல் செய்ய அன்புமணி வலியுறுத்தல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுத்தியுள்ளார்.

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல்கருகி உயிரிழந்தனர். இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து சென்னை ஹைகோர்ட் நேற்று உத்தரவிட்டது.

மேலும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தது. இதற்கு பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். விடுதலையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

94 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான கும்பகோணம் தனியார் பள்ளிக்கூட தீ விபத்தில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 9 பேரை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மலர வேண்டிய பருவத்தில் கருகடிக்கப்பட்ட குழந்தைகளின் ஆன்மா அமைதி பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்தவகையிலும் உதவாது.

தீர்ப்பை புரிந்துகொள்ள முடியவில்லை

தீர்ப்பை புரிந்துகொள்ள முடியவில்லை

கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு நிகழ்ந்த தீ விபத்தில் வகுப்பறைகளை விட்டு வெளியில் கூட வரமுடியாத நிலையில் 94 குழந்தைகள் கருகி இறந்த கொடுமையை யாரும் மறந்திருக்க முடியாது. இக்கொடுமைக்கு காரணமானவர்கள் மீது எந்த வகையிலும் இரக்கம் காட்டத் தேவையில்லை. இவ்விபத்துக்குக் காரணமான பள்ளி நிறுவனர் பழனிச்சாமிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும், சமையலர் சரஸ்வதிக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையையும், அவர்கள் இதுவரை சிறையில் இருந்த காலத்திற்கான தண்டனையாக குறைத்தும், இவ்வழக்கில் தண்டிக்கப்பட்ட மேலும் 7 பேரை முற்றிலுமாக விடுவித்தும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இதற்கான காரணம் எதுவாக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கருணை காட்டியிருப்பது சிறிதும் நியாயமல்ல

கருணை காட்டியிருப்பது சிறிதும் நியாயமல்ல

கும்பகோணம் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்த சென்ன உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம், எந்த விதிகளையும் கடைபிடிக்காமல், அடிப்படை வசதிகள் கூட இல்லாத பள்ளியில் 900 மாணவர்களைச் சேர்த்து படிப்பதற்கு அனுமதி அளித்தது குற்றம். கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்துக்கு முழுக்க முழுக்க அரசு அதிகாரிகள் தான் பொறுப்பு என்று கூறியிருந்தது. அந்த ஆணையத்தால் குற்றஞ்சாற்றப்பட்ட 5 அதிகாரிகளும் இப்போது விடுதலை செய்யப்பட்டவர்களில் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தீ விபத்து ஏற்பட்டால்
தப்பிக்க முடியாத அளவுக்கு மோசமான முறையில் பள்ளிக்கூடத்தை நடத்திய நிறுவனருக்கு 94 குழந்தைகளின் கொடிய மரணத்தில் எவ்வளவு பங்குண்டோ, அதே அளவுக்கு அந்த பள்ளிக்கு அனுமதி வழங்கிய அரசுத்துறை அதிகாரிகளுக்கும் உண்டு. பாத்திரம் அறியாமல் பிச்சைப் போடுவதைப் போல கருணையே காட்டக் கூடாத கொடிய குற்றவாளிகளுக்கு உயர்நீதிமன்றம் கருணை காட்டியிருப்பது சிறிதும் நியாயமல்ல.

எங்கிருந்து நீதி கிடைக்கும்

எங்கிருந்து நீதி கிடைக்கும்

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்து வழக்கில் சம்பந்தப்பட்டோரை காப்பாற்றுவதற்காக தொடக்கம் முதலே முயற்சிகள் நடைபெற்று வந்தன. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சி.பழனிச்சாமி, வட்டாட்சியர் பரமசிவம் ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டனர். அதன்பின் இவ்வழக்கில் கடந்த 2014&ஆம் ஆண்டு கீழமை நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பில் ஆசிரியர்கள், அதிகாரிகள் என மேலும் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்களும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்ட
நிலையில், ஆசை ஆசையாய் வளர்த்த குழந்தைகளை தீக்கு பறிகொடுத்து விட்டு தவிக்கும் பெற்றோர்களுக்கு எங்கிருந்து நீதி கிடைக்கும்.

இது என்ன நியாயம்

இது என்ன நியாயம்

94 குழந்தைகளை இழந்த பெற்றோரின் துயரம் இன்னும் தீரவில்லை. விபத்தில் உயிர் தப்பிய குழந்தைகள் இன்னும் விபத்தின் தழும்புகளுடனும், வலிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு கோரி தொடரப்பட்ட வழக்குகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அவர்கள் நீதிக்காக தொடர்ந்து போராடுகின்றனர். ஆனால், குற்றமிழைத்தவர்களுக்கு எளிதாக விடுதலை கிடைத்து விடுகிறது. இது என்ன நியாயம்?

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

கும்பகோணம் பள்ளிக்கூட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தர வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். எனவே, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Anbumani Ramadoss has urged the Tamil Nadu Government to immediately appeal to the Supreme Court against all the release of the Kumbakonam fire. Can not understand Chennai high court Judgement on this case.
Please Wait while comments are loading...