பென்னாகரத்தில் அன்புமணிக்கு மாம்பழம் ருசிக்கும்- ஜூவி ஆருடம்
சென்னை: பென்னாகரம் சட்டசபை தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி லோக்சபா தொகுதி எம்.பியாக உள்ள அன்புமணியை கடந்த 2014ம் ஆண்டே முதல்வர் வேட்பாளராக அறிவித்து மாநிலம் முழுவதும் மண்டலவாரியாக மாநாடுகளை நடத்தி தேர்தலுக்கு தயாரானது பாட்டாளி மக்கள் கட்சி.

மாற்றத்தை கொடுங்கள்... முன்னேற்றத்தை இந்த அன்புமணி ராமதாஸ் கொடுக்கிறேன் என்று பிரச்சாரம் செய்து வருகிறார் அன்புமணி ராமதாஸ்.
இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் தனித்து களமிறங்கியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, வட மாவட்டங்களில் அதிமுக, திமுகவிற்கு கடும் போட்டியை கொடுத்து வருகிறது.
தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம் சட்டசபை தொகுதியில் அன்புமணி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் அன்புமணியை எதிர்த்து அதிமுகவின் கே.பி. முனுசாமி, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் நஞ்சப்பன், திமுக வேட்பாளர் இன்பசேகரன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இந்த நான்கு வேட்பாளர்களுமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்றாலும் அன்புமணிக்கே ஆதரவு அதிகம் உள்ளது என்று ஜூனியர் விகடன் தெரிவித்துள்ளது.
அதிமுக வேட்பாளர் முனுசாமியும், திமுக வேட்பாளர் இன்பசேகனும் பாமகவின் அன்புமணிக்கு கடும் போட்டியை கொடுக்கின்றனர். இதில் இன்பசேகரன் பென்னாகரம் தொகுதியில் செல்வாக்காக இருந்த பெரியண்ணன் என்பவரின் மகன் என்பதால் அன்புமணியின் வெற்றிக்கு தடையை ஏற்படுத்தி வருகிறது.
என்னதால் போட்டி கடுமையாக இருந்தாலும் அன்புமணிக்கு வாக்களிப்போம் என்று 30 சதவிகிதம் பேரும், அதிமுகவிற்கு வாக்களிப்போம் என்று 26 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர். திமுக வேட்பாளருக்கு வாக்களிப்போம் என்று 24 சதவிகிதம் பேரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்போம் என்று 10 சதவிகிதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.
234 தொகுதிகளில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி பென்னாகரம் தொகுதியில் மட்டுமே வெல்லும் என்றும் என்றும் வட மாவட்டங்களில் திமுக, அதிமுகவிற்கு கடும் நெருக்கடியை கொடுக்கிறது என்றும் ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications