திருச்சி அருகே ஆந்திரா லாரி மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு
திருச்சி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்த வாலிகண்ட புரம் அருகே ஆந்திர பதிவெண் கொண்ட லாரி மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சென்னை நோக்கி ஆந்திர பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரி சென்றுகொண்டிருந்தது. லாரியை ஆந்திர மாநிலம் காக்கி நாடாவைச் சேர்ந்த வீரபத்திரன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்தநிலையில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூரை அடுத்துள்ள வாலிகண்ட புரம் அருகே லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் அந்த லாரியின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதில் லாரி எரிந்து சேதமடைந்தது.

தகவல் அறிந்த பெரம்பலூர் தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து மங்களமேடு காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்து விட்டு தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இச்சம்பவத்தில் லாரியில் லிப்ட் கேட்டு பயணம் செய்த உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காயமடைந்தார். அவர் மீட்கப்பட்டு பெரம்பலூர் அரசு மருதுவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications