Fearless Minds Have No Limits.. கோவை முழுவதும் அண்ணாமலை முகம் தான்! களத்தில் இறங்கிய அடிபொடிகள்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை அரசியலில் மீண்டும் அண்ணாமலை பெயர் பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தற்போது உயர்கல்விக்காக லண்டனில் தங்கி இருக்கும் சூழலில், கோவை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள அவரது ஆதரவாளர்களின் சுவரொட்டிகள் அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளன. "பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை" என்ற வாசகத்துடன், அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ள இந்த சுவரொட்டிகள், சாதாரண அரசியல் விளம்பரமாக மட்டுமல்லாமல், ஒரு அரசியல் சிக்னலாகவே பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக, "தீரன் அண்ணாமலை படை" என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் வெளியிடப்பட்டிருப்பது பாஜக உட்கட்சிக்குள்ளேயே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன. அதிமுக கூட்டணியுடன் களம் கண்ட போதிலும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல தொகுதிகளில் கட்சி கடுமையான தோல்வியை சந்தித்தது.

Annamalai Tamil Nadu BJP

இந்த தோல்விக்குப் பிறகு, கோவையில் நடைபெற்ற மாநில மையக்குழு ஆலோசனைக் கூட்டம் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்பட்டது. தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

தேர்தல் தோல்விக்கான காரணங்கள், எதிர்கால அரசியல் திட்டங்கள், அமைப்பு மாற்றங்கள் போன்றவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அண்ணாமலை கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கவில்லை என்றாலும், அவரது ஆதரவாளர்கள் கோவையில் தங்களது அரசியல் இருப்பை வெளிப்படுத்தும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியிருப்பது கவனிக்கப்படுகிறது. குறிப்பாக, "Fearless Minds Have No Limits" என்ற ஆங்கில வாசகத்துடன் கூடிய இந்த போஸ்டர்கள், இளைஞர்களை குறிவைத்து வடிவமைக்கப்பட்ட அரசியல் செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.

கோவை என்பது அண்ணாமலைக்கு அரசியல் ரீதியாக முக்கியமான மண். கடந்த சில ஆண்டுகளில் திமுக அரசுக்கு எதிராக தீவிரமாக பேசி, பாஜக அடித்தளத்தை விரிவுபடுத்த முயன்றவர் என்ற அடையாளத்தை அவர் உருவாக்கியிருந்தார். இளைஞர்கள் மத்தியில் தனி ஆதரவைப் பெற்றிருந்த அண்ணாமலை, பாஜகவின் தீவிர முகமாகவே பார்க்கப்பட்டார். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தும் நோக்கில் பாஜக மேலிடம் சில முக்கிய மாற்றங்களை செய்தது.

அதில் முக்கியமானது, அண்ணாமலை மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட சம்பவம். இதற்குப் பிறகு, கட்சியின் வேகம் குறைந்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
தற்போது கோவையில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள், "அண்ணாமலை இன்னும் களத்தில் இருக்கிறார்" என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. மேலும், "தீரன் அண்ணாமலை படை" போன்ற பெயர்கள் பயன்படுத்தப்படுவது, அவரது ஆதரவாளர்கள் தனி அமைப்பு ரீதியாக செயல்படுகிறார்களா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இதனிடையே, தமிழக பாஜகவில் விரைவில் அமைப்பு மாற்றங்கள் நிகழக்கூடும் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ள நிலையில், அண்ணாமலைக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஒரு பக்கம், நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியை முன்னெடுக்க பாஜக மேலிடம் முயற்சி செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் அண்ணாமலை ஆதரவாளர்கள் தங்களது பலத்தை வெளிப்படுத்தத் தொடங்கியிருப்பது, தமிழக பாஜக உள்கட்சியில் புதிய அரசியல் அலை உருவாகிறதா என்ற கேள்வியை கிளப்பியுள்ளது. கோவை முழுவதும் பரவியுள்ள இந்த சுவரொட்டிகள், சாதாரண ஆதரவு வெளிப்பாடு மட்டுமா? அல்லது அடுத்தகட்ட அரசியல் நகர்வுக்கான முன்னோட்டமா? என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+