தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம்? நயினார் நாகேந்திரனுக்கு வாய்ப்பு? டெல்லியின் 'ஜாதி' கணக்கு!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்படக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக மீண்டும் இணைவதால், அதிமுகவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை தமிழக தலைவர் பதவியில் இருந்து நீக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாம். இதனையடுத்து அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்த தென் மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அதிமுக இணைய இருக்கிறது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக குழு சந்தித்து பேசியது. இதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அண்ணாமலை பதவி விலக டெல்லி கட்டளை
அதேநேரத்தில் அண்ணா திமுக தரப்பில், இதுபோன்ற உறுதியான எந்த தகவலும் தெரிவிக்கப்படாமலேயே இருந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அண்ணா திமுக மீண்டும் பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக நடைபெற்ற இந்த ஆலோசனையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை பதவி விலக அமித்ஷா கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அண்ணா திமுகவுடனான கூட்டணியை முறித்தது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் இழிவாக விமர்சித்தது உள்ளிட்டவைகளால் அண்ணாமலை மீது அதிமுக தரப்பு கடும் கோபத்தில் இருந்தது. இதனைத் தணிக்கும் வகையில் அண்ணாமலையை, தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக டெல்லி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக புதிய தலைவர் நயினார் நாகேந்திரன்?
மேலும் தமிழக பாஜகவின் புதிய தலைவராக, தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனை நியமிக்கவும் டெல்லி பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாம். நயினார் நாகேந்திரன், அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு வந்தவர். பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெறுவதால், இரு கட்சிகளிடையே நயினார் நாகேந்திரன் சுமூகமான உறவை முன்னெடுத்துச் செல்வார் என்பது டெல்லி மேலிடத்தின் நம்பிக்கையாம்.
டெல்லியின் ஜாதி கணக்கு
அத்துடன் தமிழக பாஜக தலைவர் மாற்றத்தில் பாஜகவின் டெல்லி மேலிடம் இன்னொரு ஜாதி கணக்கையும் போட்டு வைத்திருக்கிறதாம். மேற்கு மண்டலத்தில் அதிமுக, பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் உள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவருமே கொங்கு வேளாள கவுண்டர் ஜாதியைச் சேர்ந்தவர்கள்தான். அண்ணாமலை பதவியை பறித்தாலும் கொங்கு வேளாள கவுண்டர் ஜாதி வாக்குகள், இந்த கூட்டணியை விட்டு வெளியேறாது என்ற நம்பிக்கை இருக்கிறதாம்.
தென் தமிழக வாக்குகளுக்கு குறி
மேலும் தென் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக இரு கட்சிகளுக்குமே வாக்கு வங்கி கிடையாது. கன்னியாகுமரி பகுதியில் மட்டும்தான் பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. அதிமுகவின் வாக்கு வங்கியாக இருந்த தேவர் ஜாதி வாக்குகளை டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரும் தங்கள் பக்கம் திசை திருப்பி வைத்துள்ளனர். இதனால் தென் தமிழ்நாட்டில் பாஜக, டிடிவி தினகரனின் அமமுக-, ஓபிஎஸ், அதிமுக உள்ளடங்கிய கூட்டணிக்கு பெரும்பான்மை தேவர் ஜாதி வாக்குகளை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதற்காகவே தென் தமிழ்நாட்டின் தேவர் ஜாதியை சேர்ந்த நயினார் நாகேந்திரனை, தமிழக பாஜக தலைவராக்குவது எனவும் டெல்லி மேலிடம் முடிவு செய்துவிட்டதாம். இனிவரும் நாட்களில் அண்ணாமலை ராஜினாமா அல்லது நீக்கம், நயினார் நாகேந்திரன் நியமனம் உள்ளிட்ட அதிரடியான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
அதிமுக கூட்டணி பாஜகவுக்கு ஏன் தேவை?
தமிழகத்தில் பாஜகவுக்கு தனித்த செல்வாக்கு எதுவும் இல்லை. அதிகபட்சம் 3% முதல் 5% வாக்குகள்தான் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரையில் கூட்டணி இல்லாமல் போனால் ஒரு இடத்திலும் கூட வெல்ல முடியாது. தற்போதைய நிலையில் அதிமுகவின் தலைவர்கள் பெரும்பாலானோர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை முன்வைத்தே அதிமுகவை கூட்டணிக்கு கொண்டு வந்தது பாஜக. அதாவது அதிமுகவின் முதுகில் எளிதாக சவாரி செய்து கொண்டே வந்தது பாஜக.
அதிமுக கூட்டணியை உடைத்துவிட்ட அண்ணாமலை
ஆனால் திடீரென அதிமுகவின் தலைவர்கள் குறித்து அண்ணாமலை இழிவாக விமர்சனம் செய்தார். இதற்கு அதிமுக பதில் தந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனாலேயே பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. இதன் பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகவும் கேவலமாக விமர்சிக்க தொடங்கினார் அண்ணாமலை. இதன் உச்சமாக எடப்பாடி பழனிசாமி ஒரு தற்குறி எனவும் விமர்சித்தார் அண்ணாமலை.
அண்ணாமலையை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள்
இந்த நிலையில் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைத்தாக வேண்டும் என பாஜக தரப்பு நெருக்கடி தந்தது. இதனையடுத்தே டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி டீம் சந்தித்தது. இந்த சந்திப்போது,, அதிமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட முதல் நிபந்தனை, அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். இதற்கு அடுத்ததாக, ஓபிஎஸ்- சசிகலா உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க முடியாது என்பதுமாகும்.
எடப்பாடி பழனிசாமிக்காக இறங்கி வந்த பாஜக
தற்போது எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனையை ஏற்றுதான் அண்ணாமலையை நீக்க முடிவு செய்துள்ளது டெல்லி பாஜக மேலிடம். இதற்காகவே அண்ணாமலையை டெல்லிக்கு வரவழைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பதவியில்; இருந்து விலக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை திரும்பிய அண்ணாமலை வெகு பவ்யமாகவே, டெல்லி சந்திப்பு பற்றி பேசினார்; டெல்லியில் பேசியதை எல்லாம் இங்கே சொல்ல முடியாது என்றார். தற்போதைய நிலையில் அண்ணாமலை, பாஜக தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. அப்படி நீக்கப்படுவதன் மூலம் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை பாஜக மேலிடம் நிறைவேற்றிவிட்டது. தற்போது பாஜக மேலிடத்தின் விருப்பப்படி,. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் சேர்ப்பாரா? இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுத்தால், செங்கோட்டையன் போன்ற ஷிண்டேக்களை பாஜக மேலிடம் களமிறக்குமா? என்கிற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் இருந்து வருகிறது.
-
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம்












Click it and Unblock the Notifications