ஜல்லிக்கட்டு.. சென்னை ஓவியக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். சென்னை ஓவியக் கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து சென்னை கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் குறித்து மாணவர்கள் பேசும் போது, "ஜல்லிக்கட்டு, விவசாயிகள் தற்கொலை பற்றி எல்லாம் தமிழக அரசுக்கு கவலையில்லை. பயிர்கள் கருகியதால் 106 விவசாயிகள் மரணம் என்ற செய்தி வந்து கொண்டிருக்கும் நிலையில், தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்க வேண்டும் என்று டெல்லிக் சென்று மோடியிடம் கோரிக்கை வைக்கிறார்.

ஏற்கனவே தேசிய விவசாயிகள் தினம் என்று ஒன்று உள்ளது. அது கூடத் தெரியாமல் ஜெயலலிதாவின் பிறந்த நாளை தேசிய விவசாயிகள் தினம் என்று கொண்டாட கோரிக்கை வைக்கின்றவர்கள்தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எப்படி விவசாயிகளை காப்பாற்றுவார்கள்.
இந்தப் பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாடு. மத்திய அரசு அதனை தடுத்து நிறுத்த முயல்வது வேதனைக்குரிய விஷயம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தியே ஆக வேண்டும்" என்று உறுதியாக மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications