குற்றாலத்தில் பலியானாரே அஸ்வின்.. அவர் வஉசியின் கொள்ளு பேரனா? வெளியான அதிர்ச்சி தகவல்..ரொம்ப சோகம்!
தென்காசி: கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வெள்ள பெருக்கில் அஸ்வின் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று பிற்பகல் பழைய குற்றால பகுதியில் ஏற்பட்ட எதிர்பாராத திடீர் வெள்ளப்பெருக்கினால் திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப்பெருக்கில் சிக்கி பரிதாபமாக பலியானான். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிறுவன் பலி: தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியான அஸ்வின் நெல்லை மாநகரப் பகுதியான என்ஜிஓ காலனியில் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் சிபிஎஸ்சி பத்தாம் எழுதி முடிவுக்காக காத்திருந்த நிலையில் அடுத்த வகுப்புக்குச் செல்ல உள்ளார். தற்போது கோடை விடுமுறை என்பதால், மூன்று நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் மேலகரத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
உறவினர்கள் அஸ்வினை அழைத்துக் கொண்டு பழைய குற்றாலத்திற்கு குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது மதியம் ஒரு மணி அளவில் பழைய குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர்.சிலர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட நிலையில் அவர்களை அங்கிருந்த மக்கள் காப்பாற்றினர்.
இந்த நிலையில் சிறுவன் அஸ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி வெளியேற முடியாமல் போன நிலையில் திடீரென மாயமானார். இதையடுத்து அஸ்வினை காணாத அவரது உறவினர்கள் அவரை தேடினர். மேலும் இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் அங்கு வந்தனர்.
சுமார் 3 மணி நேர தேர்தலுக்குப் பிறகு அருவியில் இருந்து 500 அடி தூரத்தில் உள்ள பாறையில் அஸ்வினின் உடல் மீட்கப்பட்டதை தொடர்ந்து அவரது உடலை உடற்கூராய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து சிறுவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த நிலையில் உயிரிழந்த சிறுவன் அஸ்வின் சுதந்திரப் போராட்ட வீரரும் கப்பலோட்டிய தமிழனுமான வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் சிறுவன் அஸ்வின் இறந்த சோகத்தில் அவரது குடும்பத்தினர் இருப்பதால் இதுகுறித்து பேச அவர்கள் மறுத்துவிட்டனர். மேலும் வீட்டுக்கு வேறு யாரும் வர வேண்டாம் எனவும் அவர்கள் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்வினின் தந்தையான குமார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மகன் ஆசைப்பட்டார் என்பதற்காக குடும்பத்துடன் நெல்லையிலிருந்து தென்காசி வந்திருந்த குமார் அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருந்தார். இந்த நிலையில் தான் குடும்பத்துடன் குளிக்கச் சென்றபோது அஸ்வின் உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினரையும் உறவினர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை அடுத்து பலரும் அவருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications