சிறையில் என்னைக் கொல்லப் போகிறார்கள்: மீண்டும் 'வாட்ஸ்அப்' யுவராஜ்
நாமக்கல்: சிறைக்குள் தன்னை கொலை செய்யப்போவதாக கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள யுவராஜ் பரபரப்பு புகார் ஒன்றை வாட்ஸ்அப் மூலம் பரவவிட்டுள்ளார்.
விஷ்ணு பிரியா வழக்கில் சிபிசிஐடி போலீசார் கூலிப்படையை விட மோசமாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், விஷ்ணுபிரியாவின் மரணத்திற்குக் காரணமானவர் யார் என்று தெரிந்தும், வழக்கை மூடி மறைக்க முயற்சி செய்வதாகவும் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த தலித் கோகுல்ராஜ். பொறியியல் பட்டதாரியான இவர், திருச்செங்கோட்டை சேர்ந்த ஒரு வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்தார்.
தான் காதலித்த பெண்ணுடன், கோகுல்ராஜ் திருச்செங்கோட்டில் உள்ள கோயிலுக்கு சென்றபோது, கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி அவரை ஒரு கும்பல் கடத்திச் சென்று கொலை செய்தது. ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் சடலம் தலை வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
கோகுல்ராஜ் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 5 நாட்கள் கோகுல்ராஜின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதற்குப் பின்னர் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து திருச்செங்கோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் முதல்குற்றவாளியாக கருதப்பட்ட தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ், தலைமறைவானார்.

விஷ்ணுபிரியா தற்கொலை
கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரி டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த செப்டம்பர் மாதம் தூக்குப் போட்டு தற்கொலை செய்யவே பிரச்சினை பூதாகரமானது. இதனையடுத்து கோகுல்ராஜ் கொலை வழக்கும் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

வாட்ஸ்அப் யுவராஜ்
வாட்ஸ்அப் மூலம், டிவி பேட்டி மூலமும் பேசி வந்த யுவராஜ், ஒருவழியாக சிபிசிஐடி போலீசில் சரணடைந்தார். அவர்மீது குண்டர் சட்டம் போடப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், சிறையில் உள்ள யுவராஜ், தனது உறவினர் ஒருவரிடம், டி.எஸ்.பி கொலை குறித்து போனில் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது.

அரசியல்வாதிகளின் கூலிப்படை
சிபிசிஐடி போலீஸ் மீது பரபரப்பான குற்றச்சாட்டை யுவராஜ் முன்வைத்துள்ளார். கூலிப்படையை விட மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கொடுத்த காசுக்கு மேல கூவுறேன்டாங்ற மாதிரி மக்களோட வரிப்பணத்துல சம்பளத்த வாங்கிக்கிட்டு, அரசியல்வாதிகளுக்கு கூலிப்படையாக செயல்பட்டுக்கிட்டு இருக்குது.

உண்மை மூடி மறைப்பு
கோர்ட்ல பச்சையா பொய் சொல்றாங்க. எப்படியும் உண்மை வெளியே வந்து விடக்கூடாதுன்னு மூடி மறைக்கிறாங்க. யுவராஜ் வெளியே வந்துறக்கூடாதுங்றதுல தெளிவா இருக்காங்க. எலக்சனுக்கு முன்னாடி வெளியே வந்துறக்கூடாதுன்னு இவங்களுக்கு கொடுத்த அசைன்மெண்ட்.

கொலை செய்ய முயற்சி
இந்த அசைன்மெண்ட் தெளிவாக முடிச்சிட்டாங்க. அடுத்து யுவராஜ் உயிரோடவே ஜெயிலைவிட்டு வெளியே வரக்கூடாதுனு முடிவெடுத்திருக்காங்க. அடுத்தது, அ.தி.மு.க ஆட்சிதான் வரும். அதனால, ஜெயில்லயே போட்டுறலாம்னு ஒரு டீம் உருவாக்கிட்டாங்க. அதுக்கும் சி.பி.சி.ஐ.டி உடந்தை.

விஷ்ணுபிரியா மரண வழக்கு
7 மாசமா விஷ்ணு பிரியா வழக்கை கண்டுபிடிக்க முடியாம இல்ல. எப்படி வந்து இத மூடி மறைக்கலாம்னுதான் போராடிக்கிட்டு இருக்குது. இவங்க செய்யிறது எல்லாம் அயோக்கியத்தனம். விஷ்ணு பிரியாவோட மரணத்தை மொத்த மூடி மறைக்கிற வேலையிலதான் சிபிசிஐடி போலீஸ் ஈடுபட்டுக்கிட்டு இருக்கு.

உண்மை குற்றவாளி
இவங்க உண்மையெல்லாம் வெளிக்கொண்டு வரல. விஷ்ணுபிரியா மரணத்துக்கு காரணமான டிபார்ட்மெண்ட் ஆளு யாருனு உலகத்துக்கே தெரியும். அது சிபிசிஐடிக்கு தெரியாதா என்ன? இது நான் வெளியே வந்தா தெரிஞ்சிடும்னு என்னென்ன அயோக்கியத்தனம் பண்றானுங்க பாருங்க.

ஓட்டை விற்கவேண்டாம்
அரசு துறையில் இருக்கிற பலர் இன்றைக்கு அரசியல்வாதிகளுக்கு அடிமையாகத்தான் இருக்கிறான். பொதுமக்கள் என்னக்கி விழிப்பு உணர்வு அடைஞ்சி, 500க்கும், ஆயிரத்துக்கும் ஓட்டு போடாம, உண்மையா எவனாவது இருக்கானான்னு பாத்து ஓட்டு போட்டாங்கனா வௌங்கும்.

பொது இடத்தில் அடிக்க வேண்டும்
முதலமைச்சரோ, எம்.பி.யோ, எம்.எல்.ஏ.வோ எவனாயிருந்தாலும், என்னைக்கு வந்து பப்ளிக்ல வெச்சி செருப்பால அடிக்கிறாங்களோ அன்னக்கிதான் வந்து நாடு திருந்தும்.

மீண்டும் வாட்ஸ்அப்
பொதுமக்கள் திருந்தினால்தான் நேர்மையான அதிகாரிகளால பணியாற்ற முடியும். இல்லன்னா விஷ்ணு பிரியா மாதிரி சாகடிக்கப்பட வேண்டியதுதான். முத்துக்குமாரசாமி மாதிரி ரயில் முன்னாடி பாய்ஞ்சி சாக வேண்டியதுதான் என்று வாட்ஸ் அப்பில் யுவராஜ் பேசியுள்ளார். சிறையில் இருக்கும் யுவராஜ் வாட்ஸ்அப்பில் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications