உணர்ச்சிகரமாக பேட்டி கொடுத்து விட்டு வீட்டுக்குள் போய் அழுத மு.க.அழகிரி
மதுரை: திமுக தலைவர் கருணாநிதி நேற்று தான் பேசியது குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு நேற்று மாலை செய்தியாளர்களை அழைத்து விளக்கம் அளித்து உணர்ச்சிகரமாக பேசிய மு.க.அழகிரி, பேட்டியை முடித்து விட்டு வீட்டுக்குள் சென்றபோது கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் சோகமும், வருத்தமும் அடைந்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் குறித்து மு.க.அழகிரி கூறியதாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அவரது பேட்டி உணர்ச்சிகரமாக இருந்தது.
ஆனால் கருணாநிதியின் கருத்துக்களுக்கு விளக்கம் அளித்து மு.க.அழகிரி நேற்று மதுரையில் செய்தியாளர்களை அழைத்துப் பேசியது அதை விட உணர்ச்சிகரமாக இருந்தது.

அவர் வாழனும்.. நாங்க சாகணும்
பேட்டியளித்த அழகிரி பேட்டியின் முடிவில், தலைவர் நல்லாயிருக்கணும். நூறாண்டுகளுக்கு மேல் வாழணும். அவருக்கு முன்னாடி நாங்கள் சாகணும். கலைஞரின் கண்ணீர் எங்கள் பிணத்தின் மீது விழவேண்டும் என்பதுதான், என் ஆசை என்று கூறி முடித்தார்.

வீட்டுக்குள் கண்ணீர்
பேட்டியை முடித்துக் கொண்டு உள்ளே சென்றபோது அழகிரியின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துள்ளது.

குடும்பத்தினர் அதிர்ச்சி - சோகம்
அழகிரி அழுததைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர். மனைவி காந்தியும், மகன் துரை தயாநிதியும் அழகிரியை அணைத்தபடி தேற்றி உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.

பேசவில்லை...
உள்ளே சென்ற அழகிரி யாருடனும் பேசாமல் அமைதியாக, வருத்தத்தில் மூழ்கியிருந்துள்ளார். குடும்பத்தினரும் கலங்கிப் போய் இருந்துள்ளனர்.

தொண்டர்களைச் சந்தித்தார்
கிட்டத்தட்ட அரை மணி நேரங்களுக்குப் பின்னர் மீண்டும் வெளியே வந்த அவர் அங்கு தன்னைக் காண வந்திருந்த ஆதரவாளர்களைப் பார்த்துப் பேசினார். பின்னர் மீண்டும் வீட்டுக்குள் போய் விட்டார்.


Click it and Unblock the Notifications
