இன்றுடன் மீன்பிடித் தடை நிறைவு... மீன் பிரியர்கள் நாளை முதல் ஹேப்பி அண்ணாச்சி!
சென்னை: மீன்பிடித் தடைக் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் நாளை முதல் மீண்டும் வழக்கம்போல் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலமாக அரசு உத்தரவின் பேரில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கணக்கில் கொண்டும், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கிலும் இந்த மீன்பிடித் தடைக்காலத்தை அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்தாண்டிற்கான மீன்பிடித் தடைக்காலம் கடந்தமாதம் 15ம் தேதி தொடங்கியது. இதனால் கட்டுமரம் மற்றும் மாருதி படகுகள் மூலமாக கரையோர மீன்பிடித் தொழில் மூலம் கிடைக்கும் மீன்கள் மட்டுமே சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வெளி மாநிலங்களில் இருந்தும் மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், ஆண்டுதோறும் மீன்பிடித் தடைக்காலத்தில் மீன்வரத்து குறையும் என்பதால், மீன் விலை உயர்வது தவிர்க்க இயலாததாக இருந்தது.
இந்நிலையில், கடந்த 45 நாட்களாக இருந்து வந்த மீன்பிடித் தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதனால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நாளை அதிகாலையிலேயே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
இதனால், மீண்டும் மீன் விலை குறைய இருக்கிறது. விதவிதமான மீன்களை விருப்பமான விலையில் வாங்கிச் சாப்பிட மீன் பிரியர்களும் ஆயத்தமாகி விட்டனர்.












Click it and Unblock the Notifications