பெரம்பலூரில் கல்வி கடனை வசூலிக்க வங்கி எடுத்த அஸ்திரம்.. குடும்பத்தையே ஆடிப்போக வைத்த தாயின் முடிவு
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சின்னதுரை செல்லம்மாள் என்ற தம்பதி தனியார் வங்கி கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் தங்கள் மகனுக்காக கல்வி கடன் வாங்கியுள்ளார்கள். ஆனால் கடனில் வட்டியுடன் பாதியை கட்டிய நிலையில், மீதியை கட்டவில்லையாம். இதனிடையே அவர் வங்கியில் சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் சேமிப்பு பணத்தை எடுக்க போன போது வங்கி மேலாளர் அனுமதிக்கவில்லையாம். இதனால் செல்லம்மாள் எடுத்த முடிவு அதிர வைத்துள்ளது.
மாணவர்கள் கல்வி கற்க பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக கல்விக்கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்விக்கடன் வாங்கியவர்கள் படித்து முடித்த பின்னர் திரும்ப செலுத்த ஆரம்பிக்க வேண்டும். கல்விக்கடனை பொறுத்தவரை வட்டி மிகவும் குறைவு ஆகும். எனினும் கல்வி கடனை அடைக்க முடியாத நிலையில் பலர் தவித்து வருகிறார்கள். பாதி கடனை கட்டியும், பாதி கடனை கட்டாமலும் பலர் இருக்கிறார்கள். அதேபோல் கல்வி கடனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற எதிர்பார்ப்பிலும் சிலர் கடனை அடைக்காமல் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக கல்வி கடனை வசூலிப்பதில் சிக்கல் நிலவுகிறது. சிலர் கல்விக்கடனை சரியாக செலுத்தி வந்தாலும், குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் கடனை கட்டாமல் விடுகிறார்கள். அப்படி கடனை கட்டாதவர்களிடம் கடனை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் எடுக்கின்றன. அப்படி எடுத்த நடவடிக்கையால் விரக்தி அடைந்த பெரம்பலூர் அருகே பெண் ஒருவர் உயிரையே விட்டுவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த 50 வயதாகும் சின்னதுரை என்பவரது மனைவி செல்லம்மாள் (43). இவர்களது மூத்த மகன் சுதாகர் என்ஜினியரிங் படித்து முடித்து திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய படிப்புக்காக கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் சின்னதுரை-செல்லம்மாள் தம்பதி, கடந்த 2018-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் கல்வி கடன் வாங்கினார்களாம் தற்போது வட்டியுடன் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்தில், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கட்டிய நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக மீதி தொகை செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே சின்னதுரை-செல்லம்மாள் தம்பதி கூலி வேலை செய்து சிறுக, சிறுக வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் சேமித்து வைத்திருந்தார்களாம். இந்த பணத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை அவசர தேவைக்காக வங்கியில் நேற்று செல்லம்மாள் எடுக்க சென்றுள்ளார். பணம் எடுக்க எழுதி கொடுத்து காத்திருந்த நிலையில், அந்த வங்கி மேலாளர், மகனின் கல்விக் கடனை செலுத்தினால் மட்டுமே பணத்தை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.
இதனால் வேதனையடைந்த செல்லம்மாள் மாலை 4 மணி வரை காத்திருந்துள்ளார். மேலும் கெஞ்சி கேட்டும் வங்கியில் பணம் வழங்கவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த செல்லம்மாள் அங்கிருந்து ஊருக்கு திரும்பி, தனது வயலுக்கு சென்று சேலையால் தூக்கிட்டு உயிரையே விட்டுவிட்டாராம் . இதுகுறித்து தகவலறிந்த சென்ற மருவத்தூர் போலீசார் , உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications