மீன், நண்டு, கோழிக்கும் தடை வருமா.. மாட்டிறைச்சி தடைக்கு பிற்படுத்தப்பட்டோர் பேரவை கண்டனம்
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தினை வாபஸ் பெற வேண்டும் என்றுபிற்படுத்தப்பட்டோர் பேரவை வலியுறுத்தியுள்ளது.
நெய்வேலி: மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தினை வாபஸ் பெற வேண்டும் என அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் பொதுச் செயலாளர் வீரவன்னியராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கல்வி, சமூக, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கை தான்தோன்றி தனமாக, மக்களுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காத வகையில் உள்ளது.
மனிதனின் அடிப்படை தார்மீக உரிமையான, உணவு உண்ணும் விவகாரத்தில் தலையிட்டு, மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என்ற விதத்தில் சட்டம் கொண்டு வந்திருப்பது வேதனைக்குரியது. இதனை அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை வன்மையாக கண்டிக்கிறது.

மோடிக்கு தெரியாதா?
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு காட்டிய மெத்தனத்தின் எதிரொலியாக, தற்போது கொண்டு வந்திருக்கும் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது, அடி மாட்டினையும் ஒரு போதும் விற்க கூடாது என்று கூறும் பாஜக அரசு, இந்திய நாட்டில் உள்ள ஒரு சாதாரண விவசாயி, மாட்டினை நம்பியே வாழ்க்கை நடத்தி வருவதை, பொருளாதாரத்தில் இந்தியாவை முன்னோடியாக கொண்டு வருவேன் என கூறும் பிரதமர் மோடிக்கு தெரியாதா?

விவசாயிகள் மீதான மற்றொரு தாக்குதல்
இந்தியாவில் விவசாயிகள் ஏற்கனவே பொருளாதாரம் மற்றும் வறட்சியின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு வரும் நிலையில், அவர்கள் மீது மற்றொரு தாக்குதலாகவே, இச்சட்டம் அமைந்து உள்ளது. உடனடியாக இதனை வாபஸ் பெற வேண்டும்.

மற்ற உணவிற்கு தடை
தற்போது இந்த மாட்டிறைச்சி பிரச்சினையில் ஒரு புதிய சட்டத்தை பிறப்பிப்பது என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், ஒரு குறிப்பிட்ட மதத்தையும் அழிப்பதற்கே மேற்கொள்ளப்பட்டு இருக்கும் நடவடிக்கை என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். இச்சட்டம் தொடரப்படுமானால், எதிர்காலங்களில் மீன்கள், கோழிகள், வாத்து, நண்டு, பறக்கும் பறவை இனங்கள் உள்ளிட்டவைகளை உண்பதற்கு தடை விதிக்கப்படும் என்ற அச்சம் இந்திய மக்கள் மத்தியில் எதிர்காலத்தில் ஏற்படும்.

செவிடன் காதில் ஊதிய சங்கு
இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள், மதகுருமார்கள் கடும் கண்டனம் தெரிவித்தும், பாஜக அரசு இது வரை செவிசாய்க்காமல், செவிடன் காதில் ஊதிய சங்கு போல், தான்தோன்றி தனமாக இப்பிரச்சினையில் செயல்பட்டால், கடும் பிரச்சினையை சந்திக்க நேரிடும். விவசாயிகளின் வாழ்வாதாரமே மாடு தான். மாட்டின் மூலம் அன்றாடும் பால், சாணம் உள்ளிட்டவைகளை நம்பி தான் விவசாயம் உள்ளது என்பது நாடறிந்த உண்மை.

கண்டனம்
இந்த உண்மை புரியாத மோடி அரசை கண்டித்து வருகிற ஜூன் 15 ஆம் தேதி சென்னையில் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில் அகில இந்திய அரசியல் கட்சி தலைவர்களும், மதகுருமார்களும், சமுதாய தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு வீரவன்னியராஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications