பீப் பாடல் சர்ச்சை: நேரில் ஆஜராக அவகாசம் கேட்டு சிம்பு, அனிருத் கோவை போலீசுக்கு கடிதம்
சென்னை: பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு கூடுதல் அவகாசம் கேட்டு
கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் நடிகர் சிம்பு. அதேபோல எனக்கும் இந்த பாடலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காவல் நிலையத்திற்கு அனுப்பியுள்ள விளக்க கடிதத்தில் இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.
கடந்த வாரம் மழை வெள்ளத்தில் தமிழகமே தத்தளித்தது. அனைவரும் வெள்ள நிவாரணம், மீட்பு பணிகளில் ஈடுபட்டிருக்க... இணையதளத்தில் பீப் சாங் என்ற பெயரில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் பாடல் ஒன்று வெளியானது. இந்த பாடலை நடிகர் சிம்பு எழுதி பாட, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார் என்பது புகாராகும்.
சிம்பு, அனிருத்துக்கு எதிராக கோவையில் கொந்தளித்த மகளிர் அமைப்பினர், இருவரின் புகைப்படத்தையும் செருப்பால் அடித்து தீயிட்டு கொளுத்தினர். கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
இதனையடுத்து மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதிகா கொடுத்த புகாரின் பேரில், சிம்பு, அனிருத் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டப் பிரிவு (4), பெண்களை இழிவுபடுத்துவதற்கு எதிரான சட்டம் (509), தகவல் தொழில்நுட்பச் சட்டம்(67) ஆகியவற்றின் கீழ் கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை போலீஸ் சம்மன்
இந்நிலையில், நடிகர் சிம்புவின் சென்னை தி.நகர் இல்லத்துக்கு திங்கட்கிழமை வந்த கோவை ரேஸ் கோர்ஸ் போலீஸார் சிம்பு அங்கு இல்லாததால் அவரது தந்தை டி.ராஜேந்தரிடம் காவல் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் டிசம்பர் 19ம் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி சம்மன் வழங்கினர். அதேபோல இசையமைப்பாளர் அனிருத்துக்கும் சம்மன் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் எதிர்ப்பு
நான் யாருடைய படுக்கை அறையையும் எட்டிப்பார்க்கவில்லை என்கிற ரீதியில் சிம்பு கருத்து சொல்ல பற்றிக்கொண்டது போராட்டம்.
சேலம், தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் சிம்பு, அனிருத் உருவப்பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மாதர் சங்கங்கள், மாணவர் மற்றும் இளைஞர் அமைப்பினர் இந்த போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வீட்டு முன்பு போராட்டம்
சென்னை தியாகராய நகரில் உள்ள சிம்பு வீட்டின் முன்பும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இருவரையும் கைது செய்ய வற்புறுத்தி போலீஸ் நிலையங்களில் புகார்கள் குவிந்து வருகின்றன. சைபர் கிரைம் போலீஸ் மூலம் ஆபாச பாடலில் உள்ள குரல் சிம்புவுடையதுதானா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

விடிய விடிய ஆலோசனை
இந்த நிலையில், கோவை போலீசார் சம்மனை ஏற்று நேரில் ஆஜராகி விளக்கம் கொடுப்பதா, வேண்டாமா? என்று சிம்பு-அனிருத் ஆகிய இருவரும் வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தினர். தங்களுக்கு பதில் வக்கீல்களிடமே பதில் மனுக்களை கொடுத்து அனுப்பி வைக்கலாமா? என்றும் ஆலோசனை மேற்கொண்டனர்.

விளக்க கடிதம்
சம்மனை ஏற்று சிம்புவும், அனிருத்தும் இன்று கோவை காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டு நடிகர் சிம்பு கடிதம் எழுதியுள்ளார். அதேபோல இசையமைப்பாளர் அனிருத், கோவை காவல்நிலையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், பீப் பாடலுக்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications