பாஜக-அதிமுக கூட்டணின்னு எவன்கிட்ட சொன்னேன்? நான் கிறுக்கனா? நடிக்கனுமா? திண்டுக்கல் சீனிவாசன் கோபம்
சென்னை: பாஜக, அதிமுக, பாமக எம்.எல்.ஏக்களாகிய நாங்கள் எல்லாம் ஒரே கூட்டணிங்க என்று தாம் யாரிடமும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதிமுகவின் கூட்டணி தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் அறிவிப்பார் என்றும் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு அதிமுக- பாஜக மீண்டும் கூட்டணி அமைக்க இருக்கிறது. டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2 மணிநேரம் சந்தித்து பேசி, பாஜக- அதிமுக கூட்டணியை உறுதி செய்தார்.

அமித்ஷா சந்திப்பு பற்றி எடப்பாடி விளக்கம்
இந்த சந்திப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு நலனுக்கான கோரிக்கைகள் பற்றிதான் அமித்ஷாவிடம் பேசினோம்; அரசியல் பேசவில்லை என்றார். அதேநேரத்தில் பாஜக- அதிமுக இடையேயான கூட்டணியை மறுக்காமல் சூசகமாக, அனைத்து கூட்டணிகளும் நிலையானதாக இல்லையே என்று மட்டும் பதிலளித்தார்.
பாஜக கூட்டணியை வரவேற்கும் அதிமுக தலைவர்கள்
இந்த நிலையில் அதிமுகவின் தலைவர்கள் அடுத்தடுத்து, பாஜகவுடனான கூட்டணியை வரவேற்று பேசி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், பாஜகவுடன் மட்டுமல்ல எந்த கூட்டணி அமைந்தாலும் மகிழ்ச்சிதான் என்றார். அதிமுகவின் ஆர்பி உதயகுமாரோ, சர்தார் வல்லபாய் பட்டேலைவிட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரும்பு மனிதர் என புகழ்ந்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாக சர்ச்சை
இதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர். அப்போது அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன், பாமகவின் ஜிகே மணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்களுடன் சிரித்து பேசியபடியே வந்தார். அப்போது செய்தியாளர்கள் குறுக்கிட்ட போது, அதிமுக, பாமக, பாஜக எல்லாம் ஒன்றுதான். நாங்கள் எல்லாம் கூட்டணிங்க என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்ட மறுப்பு
ஆனால் தாம் அப்படி சொல்லவே இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதாவது: அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக எடப்பாடியார் பதில் சொல்லிவிட்டார். பாமக, பாஜக கூட்டணிக்கு வருவதாக நான் யாரிடமும் சொல்லவில்லை. எவன்கிட்ட அப்படி சொன்னேன்? எவனாவது எடுத்திருக்கானா? அப்படி நான் சொல்லி இருந்தால் எடுத்திருப்பீங்கதானே.. சும்மா இப்படி எல்லாம் செய்தால்.. இதெல்லாம் ஒரு பொழப்பா.. உங்களை எல்லாம் நம்பி எப்படி பேசுறதாம்?
நான் எதுக்கு நடிக்கனும்? அப்படி சொல்லவே இல்லை
ஒரு 10 எம்.எல்.ஏக்கள் வர்றான்.. பேசிகிட்டு போறோம்.. நீங்களா ஒன்னை எடுத்து போட்டுக் கொண்டால் நாங்களா பொறுப்பு? நான் எந்த நிருபரையும் பார்க்கவில்லை.. பேசவில்லை. இதுதான் என்னுடைய பதிலாக வைத்துக் கொள்ளுங்கள். நான் கூட்டணி தொடர்பாக எதுவுமே பேசவே இல்லையே.. உண்மையிலேயே பேசலையே. .நான் எதுக்கு நடிக்கனுமா?
கூட்டணி பற்றி பேச நான் கிறுக்கனா?
கூட்டணி விவகாரம் எல்லாம் நான் பேசக் கூடிய விஷயமே அல்ல.. பொதுச்செயலாளர்தான் பேசனும்.. அதனால் நான் காலையில் அப்படி எல்லாம் கூட்டணி பற்றி சொல்லவே இல்லை தம்பி.. கூட்டணி பற்றி பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் சொல்லி இருந்தால் அவரிடம்தான் கேட்க வேண்டும்.. என்கிட்ட ஏன் கேட்கனும்? நான் என்ன கிறுக்கனா? அப்படி எல்லாம் சொல்லவே இல்லை.. கூட்டணி பற்றி எடப்பாடியார் சொல்வதுதான் இறுதியானது.. முடிவானது..அதைத்தான் எல்லோரும் சொல்லிக் கொண்டு வருகிறோம். இப்பவும் அதுதான் பதில். இந்தியாவின் இரும்பு மனிதர் என அமித்ஷாவை ஆர்பி உதயகுமார் சொல்லியிருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அது பற்றி ஆர்பி உதயகுமாரிடம்தான் கேட்க வேண்டும். இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications