சவால் விட்டபடி வரப்போறாரு அண்ணாமலை.. பல்லக்கு சுமப்பாரா? - மீண்டும் போராட்டம்? ‘பரபர’ சூழல்!
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன மடத்தில் நாளை நடைபெறும் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாக தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நானே பல்லக்கை சுமக்க நேரில் வருவேன் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நாளை நடைபெறவிருக்கும் பட்டினப் பிரவேச விழாவில் அண்ணாமலை கலந்து கொள்கிறார். அவரும் பல்லக்கைச் சுமப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தருமபுரம் சர்ச்சை
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் நடைபெறும் பட்டினப் பிரவேசம் விழாவில் பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பல்வேறு ஆதீனகர்த்தகர்கள், ஆன்மீகவாதிகள் மட்டுமல்லாமல் பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சியினரின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

பட்டினப் பிரவேசம்
இதையடுத்து, மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயிலில்ஆதீன குருமுதல்வர் ஸ்ரீ குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா மே 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மே 22-ஆம் தேதி இரவு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

அண்ணாமலை
பட்டினப் பிரவேசத்திற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடுமையாக எதிர்வினை ஆற்றினார். ஆதீனத்தை தோளில் சுமக்க நான் நேரில் வருவேன். கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது. ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜக இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டும் எனத் தெரிவித்திருந்தார்.

சிஷ்யர்களில் ஒருவனாக
மேலும், இந்த விவகாரத்தில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்து வந்த அண்ணாமலை, தடை நீக்கப்பட்ட பின்னர், "மக்களின் ஆதங்கத்தை உணர்ந்து பல்லக்கு தூக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தீயசக்திகளால் எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருக்க பாஜக துணை நிற்கும். சிஷ்யர்களில் ஒருவனாக நானும் இந்த விழாவில் பங்கேற்பேன்" எனத் தெரிவித்திருந்தார்.

ஆதீன பல்லக்கு
இந்நிலையில், தருமபுரம் ஆதீனம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தருமபுரம் ஆதீன குருமுதல்வர் குருபூஜை விழாவை முன்னிட்டு 21-ம் தேதி குருஞானசம்பந்தரின் குருவான கயிலை ஞானப்பிரகாசரின் குருபூஜை திருநாள் விழா நடைபெறும். இதைத் தொடர்ந்து, மே 22-ஆம் தேதி (நாளை) இரவு பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் பல்வேறு ஆதீனகர்த்தர்கள், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வதாக கூறியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

பதற்றமான சூழல்
நானே நேரடியாகச் சென்று தர்மபுரம் ஆதீன பல்லக்கை சுமப்பேன் என அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில் நாளை அவர் பங்கேற்கவிருப்பதால் அவர் ஆதீன பல்லக்கு சுமக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பல்லக்கு சுமப்பதற்கு திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications