ராஜாவுக்கு வாழ்த்துகள்.. ஆனா பாருங்க.. நான் சொன்னதை செய்யவே இல்ல.. மீண்டும் நிரூபணம்.. வானதி தாக்கு!
கோவை : "திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியதுதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். திமுக தலைவரின் மகனுக்குத்தான் அமைச்சர் பதவியை வழங்கியிருக்கின்றனர்." என விமர்சித்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் ஒரு அமைச்சர் நீக்கப்பட்டு புதிதாக ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் 4 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

கேபினட் மாற்றம் : பால்வளத்துறை அமைச்சர் நாசர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டு டிஆர்பி ராஜா புதிய அமைச்சராக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், மு.பெ.சாமிநாதன் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதிய அமைச்சரவையிலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய இலாகாகள் வழங்கப்படவில்லை, கட்சியில் இருக்கும் தலைவரின் மகனுக்குத்தான் அமைச்சர் பதவியை வழங்கியிருக்கின்றனர் என கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பா.ஜ.க மகளிரணி தேசியத் தலைவருமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
வானதி வாழ்த்து : கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், "தமிழ்நாட்டின் அமைச்சரவையில் புதிதாக ஓர் அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அரசியல்ரீதியாக அவர் அனுபவம் உள்ளவர். சக உறுப்பினராக அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாரிசு அரசியல் : அதே வேளையில், முதல்வர் ஸ்டாலினுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால், அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை. திராவிட மாடலின் அடிப்படை சமூகநீதி என்றால் அந்தச் சமூகநீதி, சமநீதியாக இருக்க வேண்டும். பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கவில்லை.
கட்சியில் இருக்கும் மூத்த தலைவரின் மகனுக்குத்தான் இந்தப் பதவியை வழங்கியிருக்கின்றனர். திராவிட மாடல் என்பது வாரிசு அரசியலை மையப்படுத்தியதுதான் என்பதை இது மீண்டும் நிரூபிக்கிறது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. பாஜகவில் கடைநிலை ஊழியரும்கூட நாட்டின் உயர்ந்த பொறுப்புகளுக்கு வர முடியும். உண்மையான ஜனநாயகத்தை நாங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.

பட்டியலினத்தவருக்கு முக்கிய இலாகா : முன்னதாக வானதி சீனிவாசன் வெளியிட்டிருந்த அறிக்கையில், "பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், முதல்வர்களாக, உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில் போன்ற முக்கிய துறைகளின் அமைச்சராகும்போது அவர்களுக்கு தேவையானதை அவர்களே செய்து கொள்ள முடியும். ஆனால், திமுக எப்போதுமே அவர்களை, கொடுக்கும் இடத்தில் வைக்காமல், வாங்கும் இடத்திலேயே வைத்திருக்கிறது.
இந்த அமைச்சரவை மாற்றத்திலாவது பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு துணை முதல்வர் பதவியும், உள்துறை, நிதி, பொதுப்பணி, தொழில் ஆகிய முக்கிய துறைகளில் ஒன்றையும் வழங்குவார் என்று நான் நம்புகிறேன். பல்லாவரத்தில் பேசிய சமூக நீதியை அவர் செயலில் காட்ட வேண்டும். இதுவே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு" என்று வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications