சாராய ஆலைகள் நடத்தும் திமுகவினருக்கு.. தமிழக அரசு சப்போர்ட்! தருமபுரி கொலை குறித்து அண்ணாமலை சாடல்
தருமபுரி: விவசாய நிலத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட நில உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தருமபுரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இரண்டு சிறார்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், மது விற்பனை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசை விமர்சித்துள்ளார்.
தருமபுரி மாவட்டத்தின் காரிமங்கலம்- மொரப்பூர் சாலையில் ஒண்டி புளியமரம் பகுதியில் நேற்று 36 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பான விசாரணையில், இந்த சம்பவம் சரவணன் என்பவரது நிலத்தில் நடந்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதாவது, ஒண்டி புளியமரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், சிலர் மது அருந்தியுள்ளனர். இதனை நில உரிமையாளர் சரவணன் தட்டி கேட்டிருக்கிறார்.

அப்போது மது அருந்தியவர்கள், சரவணன் மீது கத்தியால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சரவணனின் கால் நரம்பு அறுபட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறியுள்ளது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருகில் இருந்த ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சரவணன் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் போகும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்த வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் இருவர் சிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அளவுக்கு அதிகமான மது விற்பனையால்தான் இது போன்ற குற்ற செயல்கள் நடப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் x சோஷயல் மீடியாவில், "தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில், தனது விவசாய நிலத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட சரவணன் என்ற விவசாயி, கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்து பேரில் இரண்டு சிறார்களும் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.
தமிழகம் முழுவதுமே கட்டுப்பாடற்ற மது விற்பனையால், கொலைக் குற்றச் சம்பவங்கள் தொடர்கின்றன. பல்லடம் அருகே, குடியிருப்புப் பகுதியில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தையே, மது போதையில் ஒரு கும்பல் கொலை செய்த சம்பவத்தின் சுவடு மறையும் முன்னரே, மீண்டும் அதே போன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பது, திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.
உச்சவரம்பு நிர்ணயித்து மது விற்பனை செய்யும் திமுக அரசு, குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், கும்பலாக அமர்ந்து மது அருந்துவதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானால் என்ன, சாராய ஆலைகள் நடத்தும் திமுகவினருக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருப்பது மிகுந்த ஆபத்தான போக்கு.
தங்கள் கட்சியினருக்கு வருமானம் என்ற ஒரே நோக்கத்திற்காக, மது விற்பனையால் தொடரும் குற்றச் சம்பவங்களையும், அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுவதையும், தடுக்க திமுக அரசு தவறினால், இதனால் ஏற்படும் விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications