'ஒரே நாடு' கோஷங்களால் தேசத்தின் நிலை என்னவாகும்? மவுனித்த மாநில கட்சிகள்!
Recommended Video
சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடங்கி தற்போது ஒரே நாடு ஒரே தீர்ப்பாயம் என ஒவ்வொரு கட்டமாக மத்திய பாஜக அரசு அறிவித்து கொண்டே இருக்கிறது. ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் என்கிற கட்டமைப்பையே தகர்க்கும் பாஜகவின் இந்த அறிவிப்புகளுக்கு மாநில சுயாட்சி பேசும் கட்சிகள் மூர்க்கமான எதிர்ப்பை காட்டாமல் இருப்பது தேசம் எங்கும் ஒரு அசாதாரண நிலை நிலவுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த பொதுசிவில் சட்டம் என பேசப்பட்டது. ஆனால் அரசியல் கட்சித் தலைவர்களும் ஜனநாயக பற்றாளர்களும் மிக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து அப்போதைய பாஜக அரசை பின்வாங்க செய்தனர்.
தற்போது மத்திய அரசை தக்க வைத்துக் கொண்டிருக்கிற பாஜக அரசு, தமது 'ஏக' இந்தியா எனும் கொள்கைத் திட்டத்தை ஒரே தேசம் எனும் கோஷத்தால் விஸ்வரூபத்துடன் அமல்படுத்துகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களை ஜனாதிபதி ஆட்சியின் கீழ் நீண்டகாலத்துக்கு வைத்திருக்க வகை செய்யும். மாநில அரசு நிர்வாகம் என்பது முடக்கப்பட்டு மத்திய அரசின் நிர்வாகம் மட்டுமே மாநிலங்களில் இயங்கவும் வழிவகுக்கும்.

ஒரே நாடு ஒரே மின்சாரம்
ஒரே நாடு ஒரே மின்சாரம் என்பது தன்னிறைவு பெற்ற மாநிலங்களின் வருவாய்க்கு வேட்டு வைக்கிற திட்டமாகும். மின்சாரத்தில் அறிவிக்கப்பட்ட அத்தனை சலுகைகளுமே பறிக்கப்பட்டுவிடும்.

ஒரே நாடு ஒரே ரேசன்
ஒரே நாடு ஒரே ரேசன் மூலம் மாநிலங்களின் தனித்த உணவு அடையாளங்கள் இல்லாது ஒழிக்கப்படும். ரேசன் கடைகள் மூலமாக செயல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்களுக்கும் சாவுமணி அடிக்கப்பட்டு விடும்.

ஒரே நாடு ஒரே தீர்ப்பாயம்
தற்போது ஒரே நாடு ஒரே தீர்ப்பாயம் என்கிற பேராபத்தான முழக்கதை முன்வைத்துள்ளது பாஜக. இதன்மூலமாக இதுவரையில் தீர்வு காணப்பட்ட அத்தனை நதிநீர் தாவாக்களும் காலாவதியாகிவிடும். அத்தனை நதிநீர் பிரச்சனைகளுக்கும் புதியதாக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இது மாநிலங்களுக்கிடையேயான மோதலை கூர்மைப்படுத்தும்.

தென் மாநிலங்களுக்கு பாதிப்பு
நதிநீர் பிரச்சனைகள் இருக்கும் மாநிலங்களில் அமைதி சீர்குலைந்து வன்முறைகள் வெடிக்கும் நிலை உருவாகும். குறிப்பாக தென் மாநிலங்கள் அனைத்துமே நதிநீர் பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பவை. காவிரி நதிநீர் பிரச்சனை என்பது தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை மாநிலங்கள் தொடர்புடையவை என்பதை நினைவில் கொள்வோம்.

மாநில கட்சிகளுக்கு மிரட்டல்
இதை மூர்க்கமாக எதிர்த்து மாநில சுயாட்சி பேச வேண்டிய கட்சிகள் பாஜகவின் மிரட்டலுக்கு அடிபணிந்து அடக்கி வாசிக்கின்றன. எதிர்ப்பு குரல் எழுந்தால் கட்சி எப்போது வேண்டுமானாலும் காணாமலேயே போய்விடும் வித்தைகளை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக.

யானை புக்க புலம் போல
யானை புக்க புலம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக் காட்டிய வரிகள் நிச்சயமாக மத்திய பாஜக அரசுக்கு மட்டுமே பொருந்தும். ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையும் கொண்ட இந்த தேசத்தை யானை புக்க புலம் போல நுழைந்து அத்தனை விழுமியங்களையும் தலைகீழாக உருட்டி நாசமாக்கி பெரும் அலங்கோலத்தையும் அசாதாரண நிலையையும் செய்து கொண்டிருக்கிறது என்பது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோரின் பெருங்கவலை.












Click it and Unblock the Notifications