சென்னை-பெங்களூர் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வயது 50! கேக் வெட்டி கொண்டாட்டம்!!
சென்னை-பெங்களூர் இடையே பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட ஆரம்பித்து இன்றுடன் 50 ஆண்டுகள் ஆகின்றன. இதனை கொண்டாடும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா கேக் வெட்டினார்.
பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் 1964ம் ஆண்டு அறிமுகமானது. இதுதான் நாட்டில் அகல ரயில்பாதையில் இயக்கப்பட்ட முதல் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயில் நீராவி, டீசல், மின்சாரம் என்று 3 வகையான இன்ஜின்கள் மூலமும் இயக்கப்பட்ட பெருமைக்குரியது.

அறிமுகமான காலத்தில் 2 ரயில்நிலையங்களில் மட்டுமே நின்ற இந்த ரயில், இப்போது கூடுதல் ரயில்நிலையங்களில் நின்று செல்வதால் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சென்னை - பெங்களூர் இடையே 2 அடுக்கு ஏசி ரயில் இயக்கப்படுவதால் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த ஏசிப்பெட்டிகள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், இதனை கொண்டாடும் வகையில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் நடைபெற்ற விழாவில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா கேக் வெட்டினார். ரயில் பயணிகளுக்கு கேக் துண்டுகள் வழங்கப்பட்டன. ராகேஷ் மிஸ்ரா கொடியசைத்ததும் ரயில் புறப்பட்டுச் சென்றது.
டபுள் டக்கர் ஏசி ரயிலுக்கு பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் என்று பெயர் சூட்டலாமா என்று பரிசீலனை செய்து வருகிறோம் என்று மிஸ்ரா நிருபர்களிடம் தெரிவித்தார்..
மேலும், தீபாவளி சிறப்பு ரயில்கள் குறித்து ராகேஷ் மிஸ்ரா கூறுகையில், புதிதாக வெளியாகி உள்ள கால அட்டவணைக்கு ஏற்ப ரயில்களை இயக்குவதற்கான திட்டமிடும் பணியில் உள்ளோம். அந்தப்பணிகள் விரைவில் முடிவடையும். அதன் பிறகு சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications