சென்னையில், விரைவில் ஆட்டோக்களுக்கும் ‘ஸ்மார்ட் கார்ட்’ திட்டம்....
சென்னை: அடுத்த ஆண்டு இறுதியில் சென்னை நகர ஆட்டோக்கள் மேலும் ஒரு புதிய நவீனத்தை காணவுள்ளன. அதாவது பயணிகள் தங்களது கட்டணத்தை ஸ்மார்ட் கார்ட் மூலம் ஸ்வைப் செய்து விட்டு நடையைக் கட்டலாமாம்.
கையில் பணத்தை வைத்துக் கொண்டு ஆட்டோ ஏற வேண்டிய அவசியம் இனி இருக்காது. மாறாக கார்டை மட்டும் வைத்துக் கொண்டு கட்டணத்துக்குரிய பணத்தை ஸ்வைப் செய்து விட்டுப் போய் விடலாம்.
சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இந்த நவீன திட்டத்தை பரிசீலித்து வருகிறது.

ஸ்மார்ட் கார்ட் திட்டம்....
ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிப்பது போல, ஆட்டோக்கள், புறநகர் ரயில்கள், புறநகர்ப் பேருந்துகள், மெட்ரோ ரயில், மோனோ ரயில் என அனைத்துக்கும் பொருந்துவது போல இந்த ஸ்மார்ட் கார்ட் திட்டத்தை போக்குவரத்து ஆணையம் வகுத்து வருகிறது.
பயணிகளின் வசதிக்காக....
முதலில் இந்த திட்டத்தில் ஆட்டோக்கள் சேர்க்கப்படாமல் இருந்தது. தற்போது ஆட்டோக்களையும் சேர்த்துள்ளனர். இதன் மூலம் பயணிகளுக்கு எந்த வகையான பயணமாக இருந்தாலும் அது எளிதாக அமையும்.
புதிய கட்டண விகிதம்....
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், " இந்தத் திட்டத்தில் இப்போதைக்கு ஆட்டோக்கள் சேர்க்கப்பட மாட்டாது. காரணம், இப்போதுதான் டிரைவர்கள், புதிய கட்டண விகிதப்படி மீட்டர்களை மாற்றி வருகின்றனர். எனவே ஆட்டோக்கள் படிப்படியாக இந்தத் திட்டத்திற்கு பின்னர் கொண்டு வரப்படும் என்றார்.
தயக்கம்....
இதற்கிடையே, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை ஆட்டோக்களில் பயன்படுத்துவது குறித்து பல ஆட்டோ டிரைவர்கள் தயக்கம் காட்டுகின்றனராம். தங்களை போக்குவரத்து அதிகாரிகள் டிராக் செய்து பிடித்து விடுவார்கள், தேவையில்லாமல் தங்களைப் பழிவாங்க போலீஸாரும் இதை பயன்படுத்தலாம் என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணமாம். ஆனால் போக்குவரத்து அதிகாரிகள் இந்த பயம் தேவையற்றது என்கிறார்கள்.
80,000 நவீன மீட்டர்கள்....
இதற்கிடையே, சென்னையில் 80,000 நவீன மீட்டர்களுக்கான கட்டணத்தை அரசே வழங்கவுள்ளதாம். இது ஏற்கனவே ஆட்டோ வைத்திருப்பவர்களுக்குத்தான். புதிய பெர்மிட் வாங்குவோர், தங்களது ஆட்டோக்களுக்கு அவர்களே மீட்டரைப் பொருத்திக் கொள்ள வேண்டுமாம்.












Click it and Unblock the Notifications