தகுதியில்லாதவர்களை டிஎன்பிஎஸ் உறுப்பினர்களாக நியமனம் செய்வதா?- ஹைகோர்ட் கேள்வி
டிஎன்பிஎஸ்சி.யின் 11 பேரின் நியமனமும் முறைப்படி நடக்கவில்லை. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 11 புதிய உறுப்பினர்கள் நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி 11 புதிய உறுப்பினர்கள் நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.
சேதுராமன், பாலுசாமி, மாடசாமி, ராமமூர்த்தி, ராஜாராம், பிரதாப் குமார், சுப்பையா, முத்துராஜ், கிருஷ்ணகுமார், புண்ணியமூர்த்தி, சுப்பிரமணியன் உள்பட 11 பேர் நியமிக்கப்பட்டனர். இதை எதிர்த்து திமுக, பாமக, புதிய தமிழகம் கட்சிகள் தொடர்ந்த வழக்கில் 11 பேர் நியமனம் ரத்து என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை எதிர்த்து திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ்.இளங்கோவன், புதிய தமிழக கட்சியின் நிறுவனர் வழக்கறிஞர் கிருஷ்ணசாமி, பாமகவின் வழக்கறிஞர் பாலு ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றம் முதல் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் தங்களின் உத்தரவில், டிஎன்பிஎஸ்சி.யின் 11 பேரது நியமனமும் முறைப்படி நடக்கவில்லை. தகுதி இல்லாதவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே நியமன ஆணை ரத்து செய்யப்படுகிறது என்றனர். உரிய விதிகளைப் பின்பற்றாமல் நியமனங்கள் நடந்ததாகக் கூறி நியமன ஆணையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
டிஎன்பிஎஸ்சிக்கு கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி எம்.ராஜாராம் ஐஏஎஸ், வழக்கறிஞர்கள் ஆர்.பிரதாப் குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுசாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பொறியாளர்கள் பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணியமூர்த்தி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் மட்டுமே ஐஏஎஸ் அதிகாரி. மற்ற அனைவரும் பதவிக்கு தொடர்பே இல்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
2016 சட்டசபை தேர்தலுக்கு முன்பாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, டிஎன்பிஎஸ்சிக்கு 11 பேரை நியமனம் செய்தார். ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் 11 உறுப்பினர்களை நியமித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தை அதிமுகவின் தலைமைக் கழகமாக தமிழக அரசு மாற்றியுள்ளது எனத் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications