தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசும்போது தூங்கி வழிந்த வேட்பாளர்கள்...
சென்னை: அதிமுக அரசின் 5 ஆண்டுகால சாதனைகளைப் பட்டியலிட்டும் எதிர்கட்சியான திமுகவிற்கு எதிராக ஆவேசமாகவும் ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்த போது வேட்பாளர்கள் தூங்கி வழிந்த சம்பவம் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
தருமபுரியில் அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 11 தொகுதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஜெயலலிதா ஆதரவு திரட்டினார்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாது கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. தலையில் தொப்பி அணிந்து, அனல் பறந்த வெயிலிலும் அம்மா வாழ்க என்று முழக்கமிட்டனர் தொண்டர்கள். (கொடுத்த காசுக்கு கூவனுமோ? )
3 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போதும், ஒரு மணி நேரம் முன்னதாக மேடைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதிமுக அரசின் 5 ஆண்டு கால சாதனைகளை எடுத்துக் கூறி, அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.
தூங்கிய வேட்பாளர்கள்
மேடையில் அமர்ந்திருந்த பர்கூர் தொகுதி வேட்பாளர் ராஜேந்திரன், ஓசூர் தொகுதி வேட்பாளர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகிய இருவரும் முதல்வரின் பேச்சையும் பொருட்படுத்தாமல் தூக்க கலக்கத்தில் காணப்பட்டனர்.
தாலாட்டு பாடினாரோ
ஏசி போடப்பட்ட பொதுக்கூட்ட மேடையின் முன்பு சற்று நிழலான பகுதியில் அமர்ந்திருந்த அவர்கள் இருவரும், தூங்கி வழிந்தனர். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. ஜெயலலிதாவின் ஆவேசமான பேச்சு தாலாட்டு போல இருந்ததோ என்னவோ? இது தெரிந்துதான் வேட்பாளர்களை நிற்க வைத்து விடுவார் ஜெயலலிதா.
தொண்டர்களுக்கு காசு
ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்திற்கு பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டதாக, கூட்டத்திற்கு வந்தவர்களே தெரிவித்தனர்.மேலும் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை வழங்கி, அதிமுக நிர்வாகிகள் தங்களை அழைத்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
சிறப்பு ஏற்பாடுகள்
விழா ஏற்பாடுகள் சிறப்பாக இருந்ததாகவும், தங்களுக்கு தண்ணீர், தொப்பி போன்றவை வழங்கியதாகவும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் கூறினர்.












Click it and Unblock the Notifications