மெரினாவில் போராட்டம்... ஸ்டாலின், 63 எம்எல்ஏக்கள், 3 எம்பிகள் மீது பாய்ந்தது 'கேஸ்'!
மெரினாவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மு.க. ஸ்டாலின் மற்றும் 63 எம்எல்ஏக்கள், 3 எம்பிக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை: மெரினாவில் தடையை மீறி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 63 எம்எல்ஏக்கள், 3 எம்.பி.க்கள் உள்பட 2 ஆயிரம் திமுகவினர் மீது மெரீனா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இந்த வாக்கெடுப்பு ரகசிய வாக்கெடுப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்தக் கோரிக்கையை சபாநாயகர் தனபால் நிராகரித்தார். இதனால் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அடுத்தடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் சபாநாயகர் திமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திமுக எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இறுதியில் மு.க. ஸ்டாலினும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டார்.

கிழிந்த சட்டை
அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் மு.க. ஸ்டாலின் சட்டை கிழிந்தது. கிழிந்த சட்டையுடன் சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின், நேராக ஆளுநரிடம் சென்று புகார் தெரிவித்தார். பின்னர் அங்கிருந்து நேராக மெரினா கடற்கரை வந்த ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.

போராட்டம்
இதனால் சென்னை மட்டுமல்லாமல் தமிழகமே பதற்றமான நிலை உருவானது. திமுகவினர் மாவட்டந்தோறும் சாலை மறியல், சபாநாயகர் உருவபொம்பை எரித்தல் உள்ளிட்ட போராட்டங்களில் இறங்கினார்கள்.

ஸ்டாலின் கைது
மெரினாவில் ஸ்டாலினுக்கு ஆதரவாக கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. இதனைத் தொடர்ந்து மெரினா இன்னொரு போராட்டக் களமாக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் போலீசார் உடனடியாக ஸ்டாலினை கைது செய்து மயிலாப்பூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

வழக்கு பதிவு
அனுமதி பெறாமல் மெரினாவில் போராட்டம் நடத்தியதாக மு.க. ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 63 எம்எல்ஏக்கள், 3 எம்பிக்கள் மற்றும் 2 ஆயிரம் திமுக தொண்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications