பெண்ணைத் தாக்கி துப்பாக்கியால் மிரட்டிய மாஜி அமைச்சரின் மகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு

தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் முருகேஷ் குமார் (32). இவரது மனைவி கவுரி (30). இவர் ஹோமியோபதி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
தனியார் மெடிக்கல் கம்பெனியில் பணிபுரிந்துவரும் முருகேஷ்குமார் தொழில் துவங்குவதற்காக தூத்துக்குடியை சேர்ந்த ஜெபசிங் என்பவரிடம் கடந்த ஆண்டு மே மாதம் ரூ.5லட்சத்தை மீட்டர் வட்டிக்கு கடனாக வாங்கினார்.
இதற்கிடையே ஆகஸ்ட் மாதம் வாங்கிய பணத்தை முருகேஷ்குமார் ஜெபசிங்கிடம் திருப்பிக்கொடுத்தார். இதில் வட்டி மற்றும் மீதமுள்ள தொகையான ரூ.1லட்சத்து 40ஆயிரத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார்.
பணத்தை குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்கமுடியாத முருகேஷ்குமார் ஜெபசிங்கிடம் பொங்கல் முடிந்த பிறகு பணம் தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் பணத்தை கேட்டு ஜெபசிங், மற்றொரு நபருடன் முருகேஷ்குமாரின் வீட்டிற்கு நேற்று சென்றார்.
அப்போது வீட்டில் முருகேஷ்குமாரின் மனைவி கவுரியும், தாயாரும் இருந்துள்ளனர். பணத்தை கேட்டு ஜெபசிங் தரக்குறைவாக பேசியதை கவுரி தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஜெபசிங் கவுரியை அடித்து உதைத்து கீழே தள்ளியதுடன் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த கவுரி தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹோமியோபதி பெண் டாக்டரை தாக்கி, துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த ஜெபசிங் முன்னாள் தொழிலாளர்நலத்துறை அமைச்சரான சி.த.செல்லபாண்டியன் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜெபசிங் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் 294பி, 325 மற்றும் 506(2)ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். தனது மகன் ஜெபசிங் விவகாரம் அறிந்த முன்னாள் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன் கோவையில் இருந்து உடனடியாக தூத்துக்குடிக்கு விரைந்து வந்தார். இருந்தபோதும் போலீசார் படுவேகமாக செயல்பட்டு வழக்குப்பதிவு செய்துவிட்டனர்.
சமீபத்தில் வெளிவந்த ஒரு வாரஇதழில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக சி.த.செல்லபாண்டியன் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டு இருந்தது. அதற்குள் அவரது மகன் பெண் டாக்டரை தாக்கி துப்பாக்கியால் மிரட்டிய சம்பம் நடந்துள்ளது.
இதனால் அதிமுகவின் அரசியல் வட்டாரத்தில் சி.த.செல்லபாண்டியனுக்கு எதிரானவர்கள் படுகுஷியாக உள்ளனர். கடந்த ஆண்டு ஜெபசிங் பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பிற்குள்ளாகியது குறிப்பிடத்தக்கதாகும்.


Click it and Unblock the Notifications
