இதற்காகத்தான் ஆளுநரை அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்களாம்!
சென்னை: காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தியதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவருகிறார். கடந்த 16 நாட்களாக மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசின் நிர்வாகம் குறித்த ஆலோசனைக்காக சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசாகர் ராவை தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சந்தித்தனர். தலைமைச் செயலாளர் ராம மோகனராவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றார். இந்த ஆலோசனை அரைமணி நேரம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர்கள் ஆளூநர் மாளிகையை விட்டு புறப்பட்டு அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர். தலைமைச் செயலாளரும் அங்கு சென்றிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,மாண்புமிகு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பின் பேரில் தமிழக சட்டசபையின் முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ராஜ்பவனுக்குச் சென்று ஆளுநரை சந்தித்தனர். அவர்களுடன் தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவும் உடன் இருந்தார்.

முதல்வரின் உடல் நிலை குறித்து பொறுப்பு ஆளுநர், அமைச்சர்களிடம் கேட்டறிந்தார். எதிர் வரும் காவிரி உயர் மட்ட தொழில்நுட்பக் குழுவின் தமிழக வருகை குறித்து அமைச்சர்களிடம் ஆளுநர் கேட்டறிந்தார், விவாதித்தார். அவர்களது வருகை தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். தமிழக விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், கமிட்டியிடம் வைக்கப்பட வேண்டிய விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் இதுதொடர்பான விவரங்களை விரிவாக எடுத்துரைத்தார். இதுதவிர தமிழக அரசின் பொது நிர்வாகம் குறித்தும் ஆளுநர் கேட்டறிந்தார். நிர்வாக விவகாரங்கள் குறித்தும், தினசரி நிர்வாக செயல்பாடுகள் குறித்தும் ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் விரித்துரைத்தார் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications