For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருகும் பயிரை காக்க காவிரி டெல்டா மாவட்டங்களில் பந்த், மறியல்: விவசாயிகள் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தஞ்சை: காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், கருகும் பயிரை காப்பாற்ற கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை மத்திய அரசு பெற்றுத் தரக்கோரியும் டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. சாலைமறியல், ரயில் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சை, திருவாரூர், நாகை, டெல்டா மாவட்ட விவசாயத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் 12ம்தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கர்நாடகம் நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் உபரிநீரை மட்டும் திறந்து விட்டது. அதன் காரணமாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்தது.

Cauvery row: Farmers observe bandh in Tamil Nadu's delta districts

மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் ஜூன் 12ம்தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அந்த தண்ணீரும் காவிரி டெல்டா மாவட்ட கடைமடை பகுதிகளை சென்றடையவில்லை. தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் போதுமான தண்ணீர் இல்லாததால் வெடித்து கிடக்கிறது. சம்பா சாகுபடியும் கேள்விகுறியாகி விடுமோ என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் டெல்லியில் திங்கட்கிழமையன்ற நடைபெற்றது. அப்போது தமிழக அரசு சார்பில் 95 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு கர்நாடகம் சம்மதிக்கவில்லை. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரை பெற்று தராத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் சார்பிலான தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் சார்பில் இன்று தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு, சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள் மற்றும் வணிகர் சங்க பேரவை ஆதரவு தெரிவித்து இருந்தது. அதன்படி இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கடையடைப்பு

தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் ஒரு சில இடங்களில் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. டெல்டா மாவட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ஆனந்த கோபாலபுரம், சிவ விடுதி ஆகிய இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்யப்பட்டனர்.

பஸ்மறியல்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு மாநில துணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழனிச்சாமி தலைமையில் பஸ் மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

ரயில் மறியல்

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் 20 இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. தஞ்சையில் சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க விவசாயிகள் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கும்பகோணத்திலும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட மறியல்

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர், பேரளம் ஆகிய 5 இடங்களில் ரயில் மறியல் நடைபெற்றது. திருவாரூரில் எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலையும் மன்னார்குடியில் மயிலாடு துறை செல்லும் பயணிகள் ரயிலை மறிக்க முயன்ற விவசாயிகள் 56 பேரை போலீசார் கைது செய்தனர்.

விவசாயிகள் கைது

நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட இடங்களில் ரயில் மறியல் நடந்தது. மயிலாடுதுறையில் திருநெல்வேலி செல்லும் பயணிகள் ரயிலை மறிக்க முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இம்மாவட்டத்தில் 17 இடங்களில் சாலை மறியலும் நடந்தது. 3 மாவட்டங்களிலும் மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

English summary
Delta districts of Tamil Nadu, including Thanjavur, Nagapattinam and Tiruvarur, as farmers observed a bandh over the Cauvery water crisis today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X