தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. சிபிஐ விசாரிக்க ஹைகோர்ட் யோசனை.. தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவு
Recommended Video

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி சிபிஐ விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும் என்று சென்னை ஹைகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பற்றிய வழக்கு ஒன்றில் இன்று விசாரணை நடத்தியபோது, ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, போலீசார் திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். மே 22 மற்றும் 23ம் தேதிகளில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் மொத்தம், 13 பேர் கொல்லப்பட்டனர்.

நாட்டையே இந்த சம்பவம் உலுக்கியது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடியவர்கள் தமிழக போலீசாரால் சுட்டு கொலை செய்யப்பட்டனர் என்று தலைப்பிட்டு சர்வதேச மீடியாக்களிலும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, தமிழக அரசு, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. ஆனால், இந்த கமிஷன் மீது நம்பிக்கை இல்லை என்றும், மத்திய அரசின் விசாரணை ஏஜென்சிகள், தடயவியல் நிபுணர்களை உள்ளடக்கிய சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று, வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வாறு தலைமை நீதிபதி இந்த கருத்தை தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து தமிழக அரசு ஒருவாரத்தில் பதிலளிக்கவும் உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை ஒத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications