கடலூர் மத்திய சிறையை தகர்த்து தீவிரவாதியை கடத்த சதி.. உளவுத்துறை எச்சரிக்கை.. உச்சக்கட்ட பாதுகாப்பு
கடலூர் மத்திய சிறையை தகர்த்து கைதியை கடத்தப்போவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video

கடலூர்: மத்திய சிறையை தகர்த்து கைதியை கடத்தப்போவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து கடலூர் மத்திய சிறையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக, சென்னையில் வசித்து வரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அன்சர் மீரான் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அன்சர் மீரான் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையில், புழல் சிறையில் கைதிகள் சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதாக புகைப்படங்கள் வெளியான பிறகு அன்சர்மீரான் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், சிறையை தகர்த்து அன்சர் மீரானை கடத்த இருப்பதாக மத்திய உளவுத்துறை தமிழக சிறைத்துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நேற்று மாலை கடலூர் மத்திய சிறைக்கு வந்து சிறைக் காவலர்களுடன் விடிய விடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டார்.
மேலும், கடலூர் மத்திய சிறையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட ஆயுதப்படை போலீசாரும் சிறையில் குவிக்கப்பட்டுள்ளனர். சிறையை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் கடலூர் மத்திய சிறை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications