கேரளா, கர்நாடக அரசுகளுக்கு காவிரி தொடர்பான திட்டங்களுக்கு அனுமதி தர கூடாது: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் மற்றும் நீதிமன்ற வழக்குகள் முடிவடையும் வரை கேரளா, கர்நாடகா அரசுகளுக்கு காவிரி தொடர்பான எந்த ஒரு திட்டங்களுக்கும் மத்திய அரசு அனுமதி தரக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டசபையில் சிறுவாணி விவகாரம் தொடர்பான தீர்மானத்தைத் தாக்கல் செய்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

சிறுவாணி நதி, அட்டப்பாடி பள்ளத்தாக்கில், கேரள மாநிலத்தில் உற்பத்தியாகி அம்மாநிலத்திற்குள்ளேயே ஓடி, பவானி ஆற்றுடன் கேரள எல்லைக்குள்ளேயே சேருகின்ற ஒரு நதி ஆகும். இந்த ஆறு, பன்மாநில நதியான காவேரி நதியின் துணை உப நதியாகும்.

Centre should not allow Kerala, Karnataka's cauvery projects, says Jayalalithaa

காவேரி நடுவர் மன்றத்தில், கேரள அரசு, பவானிப் படுகையில், 27 டி.எம்.சி. அடி நீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரியது. அட்டப்பாடி பள்ளத்தாக்கில் பாசனம் மற்றும் குடிநீர்த் தேவைக்காக 4.5 டி.எம்.சி அடி நீர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரியது. காவேரி நடுவர் மன்றம், அதன் 5.2.2007-ஆம் நாளிட்ட இறுதி ஆணையில், கேரள பவானி படுகைக்கென மொத்தம் 6 டி.எம்.சி. அடி நீரை ஒதுக்கீடு செய்தது.

இதில், அட்டப்பாடி பாசன உபயோகத்திற்காக 2.87 டி.எம்.சி. அடி நீர் ஒதுக்கீடு செய்தது. காவேரி நடுவர் மன்ற ஆணையை எதிர்த்து கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தன.

1956-ம் ஆண்டு பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் பிரிவு 5(3)ன் கீழ் காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மீது தமிழ்நாடு அரசு விளக்கங்கள் கோரும் மனுவினை காவேரி நடுவர் மன்றத்தில் 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தாக்கல் செய்தது.

பின்னர், 5.5.2007-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தது. இவ்விரு மனுக்களிலும் இரண்டாவது போக பாசனப் பரப்பையும் மற்றும் அதற்குரிய நீரை ஒதுக்கீடு செய்ததை மறுபரிசீலனை செய்து தொன்றுதொட்டு பாசனம் மேற்கொண்டு வரும் பகுதிகளில் இரண்டாம் போக நன்செய் பயிரை அனுமதித்து அதற்குரிய நீரை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டுமென்றும், கர்நாடகாவிற்கும், கேரளாவிற்கும் பாசனம் செய்வதற்காக பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நீர்த் தேவையை குறைக்க வேண்டுமென்றும் கோரப்பட்டுள்ளது.

அதே தருணத்தில், 1974-க்கு முன்னர் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பாசனப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டிருந்த இரண்டாம் போக பாசனப் பரப்பை அனுமதித்து அதற்குரிய நீரை ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.

ஜூன் 2012-ல் அட்டப்பாடி பாசனத் திட்டத்திற்காக கேரள அரசு அணை ஒன்று கட்டுவதற்கான முயற்சி மேற்கொண்டு வருகிறது என ஊடகங்களில் செய்திகள் வந்ததை அடுத்து, நான் அன்றைய பிரதமருக்கு 21.6.2012-ம் நாளிட்டு அனுப்பிய கடிதத்தில், காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையின் மீது உச்ச நீதிமன்றத்தில், கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மற்றும் காவேரி நடுவர் மன்றத்தில் விளக்கங்கள் கோரும் மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், அந்த இறுதி ஆணை மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்படும் வரையிலும், நீதிமன்ற உத்தரவுகள் வரும் வரையிலும், கேரள அரசு காத்திருந்து அவைகளில் முடிவு தெரியும் வரையில் எந்த ஒரு திட்டத்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்து, பிரதமர் இப்பிரச்னையில் தலையிட்டு, கேரள அரசு, கட்ட உத்தேசித்துள்ள அட்டப்பாடி பாசனத் திட்டம் அல்லது வேறு எந்த ஒரு திட்டத்தையும் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணைக்கு முரணான வகையில் கட்ட வேண்டாம் என கேரள அரசுக்கு அறிவுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டேன்.

மேலும், மத்திய நீர் வளக் குழுமம் கேரள அரசின் அணை கட்டும் திட்டத்திற்கு எந்த ஒரு தொழில் நுட்ப அனுமதியும் வழங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தும்படி கேட்டுக் கொண்டேன். இதனைத் தொடர்ந்து, மத்திய நீர் ஆதார அமைச்சகம் மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் மற்றும் கேரள அரசு ஆகியவற்றிற்கு தமிழக அரசின் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டு வந்தன. மத்திய நீர் ஆதார அமைச்சகம் அதன் 19.9.2013-ஆம் நாளிட்ட கடிதத்தில், அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கு உபயோகிக்கப்பட உள்ள நீர் குறித்து, சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவினைப் பெற்ற பின்னர், காவேரி நடுவர் மன்றத்தின் இசைவைப் பெறும்படி கேரள அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கேரள அரசு, தன்னிச்சையாக அட்டப்பாடி பள்ளத்தாக்குத் திட்டத்திற்கான சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு மேற்கொள்வதற்காக, மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவிடம் Expert Appraisal Committee இடம் நிலையான ஆய்வு வரம்புகளை Standard Terms of Reference-ஐ அளிக்க கேட்டுக் கொண்டது. கடந்த மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெற்ற 92-வது கூட்டத்தில், கேரள அரசின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இக்குழு, தமிழ்நாடு அரசின் கருத்தினைப் பெறுமாறும், தமிழ்நாடு அரசு அதன் கருத்தினை அளித்த பின் தான், கேரள அரசின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என முடிவு எடுத்தது. தமிழ்நாடு அரசுக்கு 10.5.2016 அன்று கிடைக்கப் பெற்ற கேரள அரசின் கடிதம் பரிசீலனையில் இருந்த போதே, கேரள அரசு, தமிழ்நாடு அரசின் கருத்தினை பெறாமலேயே, தன்னிச்சையாக இத்திட்டத்திற்கான பரிந்துரைக்காக மீண்டும் வல்லுநர் மதிப்பீட்டுக் குழுவினை அணுகியது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 11 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற்ற 96-வது கூட்டத்தில், ஒரு பொருள் நிரலாக Agenda Item ஆக சேர்க்கப்படாமல், ஒரு கூடுதல் பொருள் நிரலாக Additional Agenda Item ஆக இது பரிசீலிக்கப்பட்டு, கேரள அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வு செய்வதற்கான, நிலையான ஆய்வு வரம்புகளை வழங்க பரிந்துரை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், இக்குழு தமிழ்நாட்டின் கருத்தினைப் பெறாமல் முடிவெடுத்துள்ளது என்பதைத் தெரிவித்தும், மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு இதன் தொடர்பாக கடிதங்கள் ஏதும் வரவில்லை என்பதை எடுத்துரைத்தும், அவ்வாறு கடிதங்கள் அனுப்பப்பட்டிருப்பதாக இக்குழுவின் நடவடிக்கை குறிப்பில் குறிப்பிட்டிருப்பது, உண்மைக்கு மாறானதாகும் என்றும் நான் 27.8.2016 அன்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளேன்.

மேலும், இப்பிரச்னையில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, வல்லுநர் மதிப்பீட்டுக் குழு, இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான நிலையான ஆய்வு வரம்புகள் வழங்குவதற்கு அளித்த பரிந்துரையை உடனடியாக திரும்பப் பெற மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் அதனைச் சார்ந்த முகமைகளுக்கு அறிவுரை வழங்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

காவேரிப் படுகையில், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இறுதியாக்கம் செய்யப்படும் வரையிலும், கேரள மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் நீர் ஆதார அமைச்சகம் ஆகியன அனுமதி அளிக்கக் கூடாது எனவும், நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.

இதனைத் தொடர்ந்து, எனது உத்தரவின் பேரில், தலைமைச் செயலாளர் மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்திற்கும் மற்றும் நீர் ஆதார அமைச்சகத்திற்கும் இதே கருத்துக்களை வலியுறுத்தி 30.8.2016 அன்று கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், தலைமைச் செயலாளர் 30.8.2016 அன்று கேரள அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், உத்தேசித்துள்ள இந்த ஆய்வினை மேற்கொள்ளக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்தியும் மற்றும் எந்தவொரு அணை கட்டும் பணியையோ அல்லது திட்டத்தையோ காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும் மற்றும் உச்ச நீதிமன்றத்திலுள்ள மேல்முறையீட்டு வழக்குகள் மற்றும் காவேரி நடுவர் மன்றத்தில் உள்ள விளக்கங்கள் கோரும் மனுக்கள் முடிவுக்கு வரும் வரையிலும், கேரள அரசு மேற்கொள்ளக் கூடாது எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மத்திய சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக வல்லுநர் மதிப்பீட்டுக் குழு 96-வது கூட்டத்தில் அட்டப்பாடி பள்ளத்தாக்கு திட்டத்திற்கு நிலையான ஆய்வு வரம்புகள் வழங்க அளித்த பரிந்துரை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது எனவும், காவேரிப் படுகையில், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழு நடைமுறைக்கு வரும் வரையிலும் மற்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இறுதியாக்கம் செய்யப்படும் வரையிலும் கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் மத்திய அரசை கேட்டுக் கொள்ள பின் வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+