கழுத்துல போட்ட நகை காணாம போச்சே… பறிகொடுத்த பெண்கள் கதறல்…
சென்னை: பெண்கள் கழுத்தில் நகை போட்டுக்கொண்டு வெளியே நடமுடியாத அளவிற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 210 செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. சென்னை மாநகரில் மட்டும் 97 செயின் பறிப்புகள் நடந்துள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம்.
அதிகரிக்கும் தங்கவிலையும், நகையை கழுத்து நிறைய போட்டுக் கொண்டு போகும் பெண்களின் கவனக்குறைவுமே நகை பறிப்பு சம்பவங்களுக்கு காரணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதிமுக ஆட்சிக்கு வந்த உடனே நகை பறிப்பாளர்களும், திருடர்களும் ஆந்திராவிற்கு ஓடிவிட்டனர் என்று கூறிய முதல்வரின் பதில் இதற்கு என்னவாக இருக்கும் என்கின்றனர் எதிர்கட்சிக்காரர்கள்.
திருடர்களான மாணவர்கள்
நகைபறி கொள்ளையர்கள் புதிது புதிதாக உருவாகின்றனர். சில மாணவர்களும் பார்ட் டைம் ‘வேலை'யாக செயின் பறிப் பில் ஈடுபடுவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. காரணம் திரைப்படங்களில் கூட தங்க நகைகளை பறிப்பது தவறில்லை என்ற ரீதியில் காட்சிகள் அமைக்கப்படுவதான்.
10ல் 6 கல்லூரி மாணவர்கள்
நண்பர்கள் மற்றும் பெண்களுடனான தவறான பழக்கத்துக்காகவும், பார்ட்டிக்கு போகவும் இன்றைய இளைஞர்களுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது. ஈஸியாக பணம் சம்பாதிக்க அவர்கள் தேர்ந் தெடுக்கும் வழி செயின் பறிப்பு. சராசரியாக 10 செயின் பறிப்பு சம்பவங்களில் 6-ல் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர் என்ற தகவல் அதிர்ச்சியாக உள்ளது.
நீங்க கவனமா இருங்களேன்
நகையை பறிகொடுத்த பெண்கள் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கப் போனால், நீங்க கொஞ்சம் கவனமா இருங்களேன்... நகை விக்கிற விலையில அதை ஏன் கழுத்தில போடுறீங்க என்ற ரீதியில்தான் கேள்வி கேட்கின்றனர் போலீசார்.
பால் வாங்குவது போல...
சென்னை மயிலாப்பூர் நாட்டு சுப்பராயன் தெருவில் பால் பூத் வைத்திருக்கும் பெண் ஒருவரிடம் காலை 6 மணிக்கு பால் வாங்க வருவது போல வந்து நகை பறித்துச் சென்றவர்களும் இருக்கின்றனர். விசாரித்து சென்ற போலீசார், திருடர்களை இன்னும் பிடித்த பாடில்லை.
நொடியில் பறிக்கப்பட்ட நகை
மயிலாப்பூர் முண்டகக்கன்னியம்மன் கோவில் வாசலில் சாமி கும்பிட்டு விட்டு வந்த நடுத்தர வயது பெண்ணின் கழுத்தில் இருந்த நகை நொடிப்பொழுதில் காணாமல் போன சம்பவமும் நடந்துள்ளது.
வெளி மாநில திருடர்கள்
தமிழகப் பெண்கள் தங்க நகைகள் அதிகம் அணிவதால், இங்கு வேலைக்கு வரும் வடமாநிலத்தவர்கள் சிலர், தொடர்ச்சியாக செயின்களை பறித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்புகின்றனராம். அதை பணமாக்கி செலவு செய்து, அந்த பணம் காலியானதும் மீண்டும் தமிழகம் வருகின்றனர்.
திருட்டு நகைகள்
திருட்டு நகைகளை வாங்கும் நகைக் கடைக்காரர்கள் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இப்போதெல்லாம் நகைக் கடைக்காரர்கள் பக்கம் திரும்புவதே இல்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
அடகு வைக்கப்படும் நகைகள்
அடகுக் கடையினர் உதவி யில்லாமல், திருட்டு நகைகளை அவர்கள் பணமாக்கிவிட முடியாது. அந்த அடகு கடைக்காரர்களைக் கண்டுபிடித்து போலீஸார் நடவ டிக்கை எடுக்கலாம்.
போலீசார் மெத்தனம்
செயின் பறிப்பு சம்பவம் நடந்ததும் அப்பகுதியே பரபரப்பாகி விடுகிறது. அடுத்த 10 நிமிடத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கிடைத்துவிடுகிறது. உடனே அதிரடி தேடுதல் வேட்டை, வாகன சோதனையில் இறங்கினால், அதே பகுதியிலேயே கொள்ளையரை சுற்றிவளைத்துப் பிடித்துவிட முடியும். ஆனால் ஒரு சம்பவத்தில்கூட போலீஸார் இப்படி செயல்பட்டதில்லை என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.
நகை பறிப்புக்கு காரணம்
தங்கம் விலை உயர்வுதான் சமீபகாலமாக செயின் பறிப்பு அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது. ஏனெனில் நகையை எளிதாக பணமாக்கிவிடலாம். அடையாளம் கண்டுபிடிப்பது சிரமம். தவிர பல மடங்கு தங்கம் விலை உயர்ந்தாலும் நடமாடும் நகைக்கடைகளாக பெண்கள் வலம் வருவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
திருடராய் பார்த்து...
திருடர்களாய் பார்த்து திருந்துவார்கள் என்று காத்திருக்க முடியாது... நடமாடும் நகைக்கடைகளாய் நடமாடி நகையை பறிகொடுப்பதோடு உயிருக்கும் ஆபத்தை விலை கொடுத்து வாங்கவேண்டாமே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். காவல்துறையினரும் மெத்தனம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் வலியுறுத்தலாகும்.
வழக்கு கூட கிடையாது
செயின் பறிப்பு சம்பவங்களுக்கு காரணம் காவல் துறையின் அலட்சியம் மட்டுமே என்று குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், பெரும்பாலும் செயின் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்படுவது ஏழைகளும், நடுத்தர மக்களும்தான். ஏனெனில் வசதி படைத்தவர்கள் நகை போட்டுக் கொண்டு நடந்து செல்வதில்லை. பல செயின் பறிப்பு சம்பவங்களுக்கு வழக்குப் பதிவதே இல்லை. எனவே காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே செயின் பறிப்புச் சம்பவங்கள் குறையும் என்கின்றனர்.
எட்டரை மணிக்கு தண்ணீர் தெளித்த பெண்ணிடம் நகை அபேஸ்
அதிகாலையில் வாசலுக்கு வந்து தண்ணீர் தெளித்து கோலம் போட்டால்தான் திடுடர்கள் தொல்லை இருக்கிறதே என்று காலை எ்ட்டரை மணிக்கு வாசலைப் பெருக்கி, தணணீர் தெளித்த பெண்ணிடமும் 5 பவுன் தாலிச் செயினை திருடர்கள் பறித்துச் சென்ற கதையும் நடந்துளளது. சென்னை அஸ்தினாபுரம் திருமலை நகரில் ஒரு பெண்மணி காலை எட்டரை மணிக்கு வாசலுக்கு வந்து தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த ஒரு நபர் மின்னல் வேகத்தில் தாலியைப் பறித்துக் கொண்டு ஓடி விட்டான். போலீஸில் புகார் கொடுத்தும் இதுவரை திருடன் சிக்கியபாடில்லை.












Click it and Unblock the Notifications