காதலித்து ஏமாற்றிய காதலன்.. காற்சிலம்போடு நீதி கேட்டு வந்த பெண்.. மதுரையில் பரபரப்பு!
மதுரை: மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கையில் காற்சிலோம்போடு முழக்கம் எழுப்பியபடி நீதி கேட்டு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை செல்லூரை சேர்ந்த ஸ்டெல்லா மேரி என்ற கோமதி (28), டிவிஎஸ் நகரைச் சேர்ந்த மோகன்தாஸ் என்பவரின் மகன் கார்த்திக் என்பவர் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக இன்று மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார்.

ஸ்டெல்லா பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, கடந்த மூன்றாண்டுகளாக நாங்கள் காதலித்து வருகிறோம். இன்னும் சொல்லப் போனால் கணவன்-மனைவி போன்றே வாழ்ந்து வந்தோம். ஆனால் அண்மைக் காலமாக எனது காதலை ஏற்க மறுத்து என்னை புறக்கணித்து வருகிறார்.
நான் செல்வாக்குள்ள குடும்பத்தை சேர்ந்தவன். எனது அந்தஸ்துக்கு உன்னையெல்லாம் திருமணம் செய்ய முடியாது. ஆகையால் என்னை மறந்து விடு என்று கூறுவதோடு இதற்கு மேல் என்னை வற்புறுத்தினால் கொலையும் செய்வேன் என மிரட்டுகிறார்.
இதுகுறித்து தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கையில்லை. ஆகையால் கடைசி முயற்சியாக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க வந்துள்ளேன் என்றார்.
அவருடன் வந்த வழக்கறிஞர் சரவணக்குமார், பாதிக்கப்பட்ட பெண் தாய் தந்தையற்ற அனாதை என்பதால், அதன்பொருட்டும் அவர் வஞ்சிக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதுகிறேன். தன்னை அவரோடு சேர்ந்து வாழ ஆட்சியரின் உத்தரவை நாடி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்றார்.
அன்று கண்ணகி காற்சிலம்போடு நீதி கேட்டு மதுரைக்கு வந்தார்.. இன்று ஸ்டெல்லா வந்துள்ளார்!












Click it and Unblock the Notifications