பெருங்குடி, கொடுங்கையூர் பகுதிவாசிகளே உஷார்....
சென்னை: மழை வெள்ள பாதிப்பை தொடர்ந்து சென்னையில் சேகரிக்கப்படும் குப்பைகளின் அளவு அதிகரித்துள்ளது. அதனால், பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளுக்கு அருகில் வசிப்பவர்கள் பல்வேறு சுகாதார சீர்கேடுகளுக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு கொட்டப்படும் குப்பைகளில் இருந்து வெளியேறும் ஆபத்தான வாயுக்களை சுவாசித்து சுவாச கோளாறில் தவித்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர் இப்பகுதிவாசிகள்.
சென்னையில் சேகரிக்கப்படும் குப்பை, பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் தினமும் கொட்டப்பட்டு வருகின்றன. சாதாரண நாட்களிலேயே சென்னையில் சராசரியாக தினமும் 5,000 டன் குப்பைகள் சேகரமாகும். ஆனால் வெள்ளத்தின் காரணமாக 10 ஆயிரம் டன்னுக்கும் மேற்பட்ட குப்பைகள் தற்போது சேகரமாகி வருகின்றன. ஆனால் இந்த குப்பைகளை முறையாக பதப்படுத்தவோ, மறுசுழற்சி செய்யவோ மாநகராட்சியிடம் திட்டம் இல்லாததால் மலை போல் குவியும் குப்பைகள் அப்படியே கிடக்கின்றன. இதனால் குப்பை கிடங்குகளுக்கு அருகில் இருப்பவர்களுக்கு சுகாதார சீர்கேடு அபாயம் நிலவுகிறது.

குப்பை மலைகள்
கடந்த, 1980ம் ஆண்டு முதல் குப்பை அங்கு கொட்டப்படு வருவதால், தற்போது இரண்டு கிடங்குகளிலும், 2,000 கோடி கிலோ அளவிற்கு குப்பை குவிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த குப்பை மலையில் இருந்து வெளியேறும் மீத்தேன் வாயுவால், தீ விபத்து சம்பவங்களும், கழிவுநீரால் துர்நாற்றமும் வீசுகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு
இதனால் குப்பைக் கிடங்குகளுக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நகருக்கும் சுற்றுச்சூழல் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது. குப்பைகளிலிருந்து மீத்தேன் வாயுவும், புற்றுநோயை உருவாக்கக்கூடிய வாயுக்களும் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர் வல்லுநர்கள்.

நோய் பாதிப்பு
சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து பெருங்குடி குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டிருப்பதே, தரமணி கல்லுக்குட்டை, பெருங்குடி பகுதிகளில் வெள்ள பாதிப்பு அதிகமானதற்கு முக்கிய காரணமானதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். ஆக்ரமிப்பை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் எந்த பயனும் இல்லை என்று கூறுகின்றனர் இப்பகுதிவாசிகள். அடிக்கடி வயிற்றுப்போக்கு, தோல் நோய் உள்ளிட்ட பல அபாயகரமான நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மாற்று திட்டம் என்ன?
பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகள் இந்தாண்டுடன் காலாவதியாகின்றன. எனவே, இங்கு குப்பைகளை மேலும் கொட்டுவதை தவிர்த்து வீடுகளில் குப்பைகளை சேகரிக்கும் போதே, அவற்றை மக்கும், மக்காத குப்பை என பிரித்து சேகரிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த இரு குப்பை கிடங்குகளையும், விஞ்ஞான ரீதியாக மூடவும், திடக்கழிவு மேலாண்மை செய்யவும், கடந்த கால கட்டங்களில் பல்வேறு திட்டங்களை மாநகராட்சி வகுத்து வந்தது. ஒரு திட்டமும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.

குவியும் குப்பை மலைகள்
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஒட்டுமொத்த குப்பையும், வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு, சென்னையில் கரை ஒதுங்கி உள்ளன. சென்னை மாநகராட்சி பகுதியில் பெய்த கனமழை வெள்ளத்தாலும், குப்பை அதிகளவில் தேங்கி கிடக்கிறது. கடந்த வாரம் வரை 50 ஆயிரம் டன் குப்பை மட்டுமே அகற்றப்பட்டுள்ளது. இன்னும் ஒரு லட்சம் டன் வரை குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டிய நிலையில், குப்பை கிடங்குகள், தற்போது குவிக்கப்படும் குப்பையால், மேலும் நிரம்பி வழிகின்றன.

வெள்ள நிவாரண பொருட்கள்
இதற்கிடையே, வெள்ள நிவாரணப் பொருளாக அளிக்கப்பட்டவை வேறு, கணிசமான அளவில் குப்பையாக சேரும். அவையும் இந்த கிடங்குகளுக்குத் தான் கொண்டு செல்லப்பட்டு கொட்டப்படுகின்றன. கொடுங்கையூரில், 269 ஏக்கர் பரப்பளவிலும், பெருங்குடியில், 200 ஏக்கர் பரப்பளவிலும் குப்பை கொட்டப்படுகிறது. குப்பை பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் குவிந்து கிடப்பதால், மீத்தேன் வாயு, கழிவுநீர் அதிகமாக கசிகின்றன.

சுவாச கோளாறுகள்
கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்திற்கு நாள்தோறும் வடசென்னை முழுவதும் உள்ள பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தான் கொட்டப்பட்டு வருகிறது. இதைப்போல் ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளும் கொட்டப்படுகிறது. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. குவிந்து கிடக்கும் குப்பைகளை சில சமூக விரோதிகள் தீ வைத்து எரிக்கின்றனர். அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் கொடுங்கையூரை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாசம் சம்பந்தமான பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ள கொடுங்கையூர் குப்பை கிடங்கை அகற்ற கோரி பெரம்பூர் எம்எல்ஏ சவுந்தரராஜன் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால், நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஒத்துழைக்காத மக்கள்
பொதுமக்கள் ஒத்துழைத்தால் பல நூறு டன் திடக்கழிவை மறுசுழற்சி செய்யமுடியும். அதனால் குப்பைகள் குவிவதை பெருமளவு தடுக்கமுடியும். குப்பையை, மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்துக் கொடுங்கள், என மாநகராட்சி பல முறை அறிவித்தும், அதற்கு நகரவாசிகள் ஒத்துழைக்காததால், குப்பையை மறுசுழற்சி செய்யும் முயற்சி வெற்றி பெறாமல் போய்விட்டது. குப்பையைத் தரம் பிரித்துக் கொடுத்து, அவை மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்பட்டால், கொடுங்கையூர், பெருங்குடி போன்ற குப்பை சேகரிக்கும் இடங்களில் டன் கணக்கில் குவியும் குப்பையின் அளவு கணிசமாகக் குறையும் என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications