மே மாத டியூட்டியை இப்பவே தொடங்கிய சூரியன்... கொதிக்கும் கொப்பரையான சென்னை!
சென்னை: வழக்கமாக மே மாதத்தில் அடிக்கின்ற வெயில் தற்போதே சென்னை உள்ளிட்ட நகரங்களில் வெளுக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர்.
ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். எனவே அதனைக் கருத்தில் கொண்டே அம்மாதங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு வருகிறது.
ஆனால், வழக்கத்திற்கு மாறாக இம்முறை மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்தே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது.

105 டிகிரி வெயில்...
நேற்று அதிகபட்சமாக கரூர், வேலூர், மதுரை, சேலம் ஆகிய இடங்களில் வெயிலின் அளவு 105 டிகிரியை எட்டியது. வெயிலின் அளவு 105 டிகிரியாக இருந்தாலும், 119 டிகிரி வெயில் இருப்பது போல் அனல் காற்று வீசுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

தீயாய் வேலை செய்யும் சூரியன்...
அதிகாலை முதலே சுள்ளென வெயில் அடிக்கத் தொடங்குவதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் வாழும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சும் சூழல் காணப்படுகிறது. மாலை 6 மணிக்கு சூரியன் மறைந்த பிறகும் பகலில் அடித்த வெயிலின் தாக்கம் காரணமாக புழுக்கமான சூழல் நிலவுகிறது.

பாவம் மாணவர்கள்...
ஆனால், பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் கட்டாயம் தேர்வு முடிந்து மதிய வேளையில் வீடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதேபோல், மதியம் வகுப்புச் செல்பவர்களும் வெயிலின் உக்கிரத்தை அனுபவித்தபடியே செல்ல வேண்டியுள்ளது. இதேபோல் பணி நிமித்தம் வாகனங்களில் செல்வோரும், கொதிக்கும் வெயிலில் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதிப்படுகின்றனர்.

கொதிக்கும் பூமி...
இம்மாதத் தொடக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தபோதும், கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி வருகிறது. இதனால் மதிய வேளைகளில் கொதிக்கும் கொப்பரை போன்று தரை தகித்துக் கிடக்கிறது.

மக்கள் கூட்டம்...
வெயில் காரணமாக குளிர்பானக் கடைகளிலும், சாலையோர இளநீர், தர்ப்பூசணி, நுங்கு கடைகளிலும், கரும்புச்சாறு, கம்பங்கூழ் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அச்சம்...
இப்போதே இப்படி இருக்கிறதே இன்னும் ஏப்ரல், மே மாதங்களில், அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரத்தை எப்படிக் கடக்கப் போகிறோம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது.












Click it and Unblock the Notifications