மூளைச்சாவு அடைந்த சென்னை இளைஞரின் கல்லீரல் கோவைக்கு பறந்தது
சென்னை: சென்னையில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஐ.டி. ஊழியர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அந்த இளைஞரின் கல்லீரல், விமானம் மூலம் கோவை எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஒருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
சென்னை கொரட்டூர் கார்டன் எஸ்.ஐ.சி. பிளாக் பகுதியைச் சேர்ந்த புஷ்பராஜன். இவருடைய மனைவி வென்சி. இவர்களுக்கு ஜான் மற்றும் கிறிஸ்டோ சுகந்த்(26) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
புஷ்பராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன்பே இதய நோயால் இறந்துவிட்டார். கிறிஸ்டோ சுகந்த் சென்னை சேத்துப்பட்டில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 14-ம்தேதி, கிறிஸ்டோ சுகந்த் இரவு பணி முடிந்து, 15ஆம் தேதி அதிகாலையில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். சென்னை அண்ணா மேம்பாலத்தில் சென்று கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையில் விழுந்து விபத்துக்கு உள்ளானார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை, அருகில் உள்ளவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கிறிஸ்டோ சுகந்த் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மூளைச்சாவு
இந்த நிலையில் 16ஆம் தேதி இரவு 11.30 மணியளவில் கிறிஸ்டோ சுகந்த் மூளைச்சாவு அடைந்து விட்டதாக அவருடைய உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில், கிறிஸ்டோ சுகந்த் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவருடைய தாயார் மற்றும் உறவினர்கள் முன் வந்தனர்.
உடல் உறுப்புகள் தானம்
இதையடுத்து நேற்று காலை கிறிஸ்டோ சுகந்த்துக்கு அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து இதயம், கல்லீரல், கண்கள், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உடல் உறுப்புகளை மருத்துவர்கள் வெளியே எடுத்தார்கள்.
சென்னையில் இதயம்
கிறிஸ்டோ சுகந்த்தின் உடல் உறுப்புகளில் இதயமானது சரியாக நேற்று பிற்பகல் 1.01 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலிருந்து, அப்போலோ மருத்துவமனை வரை போக்குவரத்து சரிசெய்யப்பட்டு, வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. சரியாக பிற்பகல் 1.08 மணிக்கு கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு இதயம் கொண்டு சேர்க்கப்பட்டது. சரியாக 7 நிமிடத்தில் 5 கி.மீ. தூரத்தை கடந்து இதயம் பயணித்துள்ளது.
கண்கள் தானம்
மூளைச்சாவு அடைந்த கிறிஸ்டோ சுகந்த்திடம் இருந்து எடுக்கப்பட்ட 2 கண்களும் எழும்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கல்லீரல் பாதிப்பு
இதனிடையே, கல்லீரல் பாதிப்பு காரணமாக, கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சைப் பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
விமானம் மூலம்
இந்த நிலையில், சென்னையில் விபத்தில் உயிரிழந்த கிறிஸ்டோவின் கல்லீரலை, அந்த நபருக்கு பொருத்த மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, கிறிஸ்டோவின் கல்லீரல் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை கொண்டுச் செல்லப்பட்டது.
6 மணிநேரம் அறுவைச் சிகிச்சை
பின்னர், பாதிக்கப்பட்ட நபருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மாலை 4 மணியில் இருந்து இரவு 10 மணி வரை என, சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற அறுவைச் சிகிச்சைக்குப் பின், அந்த கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
முதல் முறையில் பயணம்
அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நபரின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். சென்னையில் இருந்து விமானம் மூலம் உடல் உறுப்பு கொண்டு வரப்பட்டு, கோவையில் உள்ள ஒருவருக்கு பொருத்தப்படுவது இதுவே முதன் முறை எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நெகிழ்ச்சியான தருணம்
மூளைச்சாவு அடைந்த கிறிஸ்டோ சுகந்த்தின் உறுப்புகள் தானம் செய்யப்படும் போது அவருடைய தாயார் வரவில்லை. உறவினர்கள் மட்டுமே கண்ணீர் மல்க வழியனுப்பினர். இதனை மருத்துவமனைக்கு வந்திருந்த அனைவரும் நெகிழ்ச்சியுடன் பார்த்து கண்கலங்கினர்.












Click it and Unblock the Notifications