டெல்லி டூ சென்னை; 2100 கிமீ சைக்கிளில் பயணம்! தோனியின் வெறித்தனமான ரசிகர்!
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தோனியை நேரில் பார்ப்பதற்காக டெல்லியிலிருந்து சைக்கிளிலேயே 2100 கிமீட்டர் பயணித்து சென்னைக்கு வந்துள்ளார்.
தோனிக்கு தமிழ்நாட்டில்தான் ரசிகர்கள் அதிகம். அவர் எதைச் செய்தாலும் அதைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவுக்கு நிறையத் தமிழ்நாட்டு ரசிகர்களை அவர் சம்பாதித்து வைக்கிறார்.

அந்த ரசிகர்களை எல்லாம் ஓரங்கட்டும் அளவுக்கு கொலவெறி ரசிகர், 19 வயது இளைஞர் ஒருவர் சைக்கிளிலேயே பயணம் செய்து சென்னைக்கு வந்திருக்கிறார். இவ்வளவு கிமீட்டர் எதற்காகப் பயணம் செய்து வந்தீர்கள் என அவரைக் கேட்டால், 'ஒரே ஒரு போட்டோ, ஒரே ஒரு ஆட்டோ கிராஃப்' என்று சொல்லி மனதை கிறங்கடிக்கிறார்.
தோனிக்காக இவர் 2100 கிமீட்டரை சைக்கிளிலேயே பயணித்திருப்பதிலிருந்தே இவர் எந்தளவுக்கு தோனி மீது அன்பு வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது.
இந்த இளைஞரின் பெயர் கவுரவ். இவர் பீகாரை சேர்ந்தவர். இவருக்கு கிரிக்கெட் என்றால் கொள்ளை ப்ரியம். உள்ளூரில் இவர் ஒரு கிரிக்கெட் வீரர். அதன் மூலம் கொஞ்சம் வருமானம் கிடைக்கும் அளவுக்கு அவரது ஊரில் பிரபலமாக இருந்து வருகிறார்.
"எனக்கு தோனியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை. நான் ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர். டெல்லியிலிருந்து நான் சைக்கிளில் பயணித்தே சென்னை வந்து சேர்ந்திருக்கிறேன்.

ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க வேண்டும். அதில் தோனியை சந்தித்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும். சென்னைதான் அதற்குச் சரியான இடம். ஆகவே இந்த முடிவை எடுத்து வந்துள்ளேன்" என்கிறார் கவுரவ்.
அதற்காக அவர் சிஎஸ்கேவின் மஞ்சள் உடையை அணிந்தே பல மாநிலங்களைப் பயணித்துள்ளார். பீகாரிலிருந்து வந்த இந்த இளைஞர் சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகிலேயே சாலையில் கூடாரம் அடித்து இரவில் தங்கி உள்ளார்.
இரவில் நடைபாதையில் கூடாரம் அடித்து உட்கார்ந்திருந்தவரை ஊடகங்கள் விசாரிக்க ஆரம்பித்துள்ளன. அதன் மூலம் இவரது விருப்பம் இன்று உலகம் அறியும்படி மாறியுள்ளது.

இவரிடம் சென்னை வருவதற்குப் போதிய வசதி இல்லை. ஆகவேதான் சைக்கிள் பயணத்தைத் தேர்வு செய்துள்ளார் கவுரவ். மேலும் இந்த சைக்கிள் பயணத்திற்குக் கூட அவரது நண்பர்களே சேர்ந்து பொருளாதார உதவி செய்துள்ளனர். அந்தளவுக்கு தோனி மீது பைத்தியமாக உள்ளார் இந்த இளைஞர்.
இவ்வளவு தூரம் பயணித்து வந்த அவரிடம் எத்தனை வருடங்களாக தோனி ரசிகராக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, 'கடந்த 6 ஆண்டுகள் மேலாக நான் தோனியின் தீவிர ரசிகராக இருந்து வருகிறேன்' என்று முகம் முழுக்க பல்லைக்காட்டிச் சிரிக்கிறார் இவர்.
அந்தளவு ரசிகராக இருந்ததால்தான் 23 நாள்கள் சைக்கிளில் பயணித்து தோனியைப் பார்க்க இவரால் வர முடிந்துள்ளது. இவர் தோனிக்காக கடந்த 7 நாட்களாகச் சென்னையிலேயே நடைபாதைகளில் படுத்து உறங்கி வந்துள்ளார்.

"தோனியை சந்திக்க முடியவில்லையே என்று எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. பெங்களூரு மோத உள்ள அடுத்த போட்டியில் வென்று ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறி, சென்னை அணி இறுதிப்போட்டியில் கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்" என்கிறார் இந்த மஞ்சள் அணி வெறியர்.
கடந்த ஒரு ஆண்டுகளாகத் தான் தோனியை பார்க்க முயற்சி செய்து வருவதாகவும், அந்த ஆசை இன்னும் நிறைவேறவில்லை என்றும் சொல்லும் கவுரவ் ஒருவேளை அவரைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நான் என்ன செய்வேன்? எப்படி நடந்துகொள்வேன் என்றே சொல்ல முடியாது.
அந்தளவுக்கு மனதிற்குள் கனவைச் சுமந்துகொண்டு திரிந்து வருகிறேன் என்றார் இந்த பீகார் கிரிக்கெட் வீரர்.












Click it and Unblock the Notifications