வண்டலூர் டூ கேளம்பாக்கம்.. இன்று முதல் "இந்த" வாகனங்கள் செல்ல தடை.. சென்னை தாம்பரம் போலீசார் அதிரடி
செங்கல்பட்டு: வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்ன?
வண்டலூர் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள நெடுஞ்சாலையில் கல்லுாரி மற்றும் பல்கலைக்கழகங்கள், அரசு பள்ளிகள் என அதிக அளவில் செயல்பட்டு வருகின்றன.. இதனால், போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.

அதேபோல, கனரக வாகனங்களும், அதிவேகமாகவும், பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படும் விதமாகவும் செல்வதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
புகார்கள்: சமீபத்தில்கூட, செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையின் குறுக்கே ரத்தினமங்கலம் என்ற இடத்தில் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் மழை நீர் செல்லும் வகையில் கால்வாய் அமைத்து சிறிய பாலம் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியிருந்தார்கள்.
இதன் காரணமாக ரத்தினமங்கலம் பகுதியில் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்களும், கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி செல்லும் வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டன. அதுமட்டுமல்லாமல், அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்கு போலீசார் யாருமில்லாததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் நீண்ட நேரம் போக்குவரத்தில் சிக்கியது,. மிகப்பெரிய சலசலப்பை அப்போது தந்திருந்தன.
சிக்னல்: இதில் மழை வந்துவிட்டால் இன்னும் நிலைமை மோசமாகிவிடுகிறது.. அதனால்தான், வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா சிக்னலில் இருந்து, கேளம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையில், காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல், இரவு 10 மணி வரையும், கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து, தாம்பரம் கமிஷனர் உத்தரவிட்டுள்ளதாக, கூடுவாஞ்சேரி போலீசார் தெரிவித்தனர்.
வண்டலூர் முதல் கேளம்பாக்கம் வரை உள்ள சாலைகளில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அதிகமாக இருப்பதன் காரணமாக கனரக வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பொதுமக்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக எழுந்த புகாரின் அடிப்படையில் தான் மேற்குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை: வண்டலூர்- கேளம்பாக்கம் சாலையில் இன்று முதல் காலை 7-11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தடையை மீறி கனரக வாகனங்கள் இந்த சாலையில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications