சென்னை அண்ணாசாலையிலும் பாய்ந்த மழைவெள்ளம்... போக்குவரத்து முடக்கம்.... பல லட்சம்பேர் பரிதவிப்பு..

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலாறு காணாத கனமழை மற்றும் ஆற்று நீர் வெள்ளத்தால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் சிக்கி சிதைந்து போயுள்ளது... சென்னையின் இதயபகுதியான அண்ணாசாலையும் வெள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கிய நிலையில் லட்சக்கணக்கானோர் இன்னமும் பரிதவித்து வருகின்றனர்.

சென்னையில் 40 மணிநேரத்துக்கும் மேலாக அடைமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது. பெரும்பாலான இடங்களில் முழங்கால் அளவு வெள்ள நீர் கரைபுரண்டோடியது.

இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் மிக அதிக அளவு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. செம்பரம்பாக்கத்தில் 30 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.

அடையாறு நீர்

இந்த செம்பரம்பாக்கம் உபரிநீர் அடையாறு ஆற்றில் கலந்து கடலில் கலக்கிறது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள சென்னை நகரப் பகுதிகள் முழுவதும் வரலாறு காணாத வெள்ளத்தைச் சந்தித்தன. மேற்கு தாம்பரம், முடிச்சூர், குன்றத்தூர், திருநீர்மலை தொடங்கி அடையாறு முகத்துவாரம் வரை அனைத்து கரையோர பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டோடியது.

சென்னை நகருக்குள் மணப்பாக்கம், நந்தம்பாக்கம், ராமாபுரம் ஈக்காட்டுதாங்கல்- காசி தியேட்டர் பாலம், சைதாப்பேட்டை மறைமலடியகள் பாலம், கோட்டூர்புரம், அடையாறு திரு.வி.க. பாலம் ஆகியவற்றை மூழ்கடித்த வெள்ள நீர் சென்னை நகருக்குள்ளும் ஊடுருவியது.

ஈக்காட்டுதாங்கல்

ஈக்காட்டுதாங்கல் பாலத்தைத் தாண்டிய வெள்ள நீர் வெள்ளத்தில் அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை, எம்.ஜி.ஆர். நகர், கோடம்பாக்கத்தை சூழ்ந்தது. கோயம்பேடு செல்லும் 100 அடிசாலையில் பல அடி உயரத்துக்கு வெள்ளநீர் தேங்கி நின்றதுடன் நேரம் செல்ல செல்ல இந்த நீரின் அளவும் அதிகரித்தது.
இன்னொருபுறத்தில் கிண்டியை நோக்கி பாய்ந்த வெள்ளத்தில் ஜெயா டிவி, புதியதலைமுறை டிவி ஆகியவற்றின் அலுவலகங்கள் சிக்கின.

தி.நகர்- அண்ணாசாலையில் வெள்ளம்

அதேபோல் சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தை மூழ்கடித்த வெள்ள நீர் சைதாப்பேட்டைக்குள் ஊடுருவி தி.நகர், தேனாம்பேட்டையை பதம் பார்த்து ராதாகிருஷ்ணன் சாலையை எட்டியது.

இதனால் சென்னையின் இதயபகுதியான அண்ணாசாலையின் பெரும்பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட போக்குவரத்து முடங்கியது.

சைதாப்பேட்டை வெள்ள காட்சி..

சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தை மூழ்கடித்த அடையாறு ஆற்று நீர் முழுவதுமாக சைதாப்பேட்டை பகுதியை சூழ்ந்திருக்கும் காட்சி நியூஸ் 7 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதன் வீடியோ பதிவு:

கோட்டூர்புரம்

கோட்டூர்புரம் பாலத்தை மூழ்கடித்து அதன் கரையோர வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளின் 2-வது மாடியை எட்டியது. கோட்டூர்புரம் பாலத்தின் 2 பகுதிகளிலும் அடையாறு ஆற்று வெள்ள நீர் கரைபுரண்டோட சி.ஐ.டி. நகர், போட்கிளப், போயஸ் தோட்டம் என ஒருபுறம், மறுபுறம் கோட்டூர்புரம், காந்திமண்டபம் சாலை என வெள்ளநீர் பாய்ந்தோடியது.

அடையாறு

அடையாறு

அடையாறு திரு.வி.க. பாலத்தை தாண்டி முகத்துவாரமே கடலாக விரிந்து காட்சி தந்தது. அப்பகுதியில் காந்திநகர், மல்லிகைப்பூ நகரை தாண்டி அடையாறு சிக்னல் வரை வெள்ளம் பாய்ந்தது. இப்பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கினர்....

இதேபோல் அடையாறு பக்கிங்ஹாம் கால்வாயிலும் வெள்ளம் கரைபுரண்டோட திருவான்மியூர், கொட்டிவாக்கம், துரைப்பாக்கம், நீலாங்கரை என அப்பகுதி கரையோர மக்களும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.

செங்குன்றம்

செங்குன்றம்

புழல் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால் செங்குன்றம், மாதவரம், மணலி புதுநகர் உள்ளிட்ட புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

மத்திய சென்னை

மத்திய சென்னை

இவை இல்லாமல் கொசஸ்தலை, கூவம், ஓட்டேரி நல்லா ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சூளைமேடு, கோயம்பேடு, அமைந்தகரை, அண்ணாநகர், முகப்பேர் மேற்கு, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு என சென்னையின் மத்திய பகுதிகளும் வெள்ளத்தில் சிக்கின.

வடசென்னை, கொரட்டூர்

வடசென்னை, கொரட்டூர்

மேலும் கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி பகுதிகளும் வடசென்னையின் வியாசர்பாடி, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை என பெரும்பாலான இடங்களும் மழை வெள்ளத்தில் மிதக்கின்றன.

தென்சென்னை புறநகர்

தென்சென்னை புறநகரில் சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, நங்கநல்லூர், தில்லைகங்கா நகர் பகுதிகளின் வெள்ள நீர் வடியாத நிலையில் அப்பகுதி ஏரிகளில் இருந்து வெளியேறிய நீர் அப்பகுதி குடியிருப்புகளை மூழ்கடித்தது.

தாம்பரம், முடிச்சூர்

தாம்பரம், முடிச்சூர்

தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், காட்டாங்குளத்தூர் பகுதியில் ஏரிகளின் வெள்ளநீர் உடைப்பெடுத்து சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றும் கரைபுரண்டோடியது. இதில் ஒரு பகுதி வெள்ள நீர் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்குள்ளும் போனது.

இதன் விளைவாக லட்சக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கின. இப்பகுதிகளில் 12 ஆயிரம் போலீசார், 1,500 தீயணைப்பு படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், கடலோர பாதுகாப்புப் படை குழும கமாண்டோ வீரர்கள், கடலோர காவல் படையினர், ராணுவத்தினர் உள்ளிட்டோர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+