ஆதின விசயத்தில் தலையிடாது..நடராஜர் கோவிலை அறநிலையத்துறை வசமாக்கும் திட்டமில்லை..சேகர்பாபு அதிரடி
சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சைவம் சார்ந்த ஆதினங்களால் தான் தமிழ் தழைத்தோங்கும் என்பதால் அவர்களுக்கு உண்டான சிறப்பு சேர்க்கும் அரசாக தமிழக அரசு விளங்கும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு வருகை புரிந்தார். அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தருமபுர ஆதீன 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
தருமபுரம் ஆதீனத்தில் 25 அறைகளுடன் கட்டப்படுள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருள் நிலைய விருந்தினர் மாளிகையை அறநிலையத்துறை அமைச்சர் திறந்து வைத்து ஆதீன வளாகத்தில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அங்குள்ள தேவார திருமுறை பாடசாலையை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அறநிலையத்துறை தலையிடாது
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆதீன மடாதிபதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதினங்கள் ஈடுபட்டுள்ளன, ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும், அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது என்று கூறினார்.

சிதம்பரம் நடராஜர் கோவில்
சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சேகர்பாபு, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மற்றபடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.

ஆய்வு செய்ய கடிதம்
நடராஜர் கோயில் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்திற்கும் தீட்சிதர்களுக்கும் எதிராக இந்து சமய அறநிலையத்துறை செயல்படாது எனவும், தீட்சிதர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள், பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான பிரச்சனைகள் என ஏராளமான புகார்கள் வந்துள்ளது. அந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளோம், திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும் என நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை என்றார்.

தீட்சிதர்கள் விஷயம்
சிதம்பரம் நடராஜர் கோவிலை அறநிலையத்துறை உறுப்பினர்கள் குழு வரும் ஜூன் 7ம் தேதி முதல் 8ஆம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீட்சிதர்கள் பிரதமரை சந்திப்பதாக கூறுவது ஜனநாயக உரிமை அதற்கு நாங்கள் எந்தவித தடையாக இருக்க மாட்டோம் என்றும் சேகர்பாபு கூறியுள்ளார்.

அறநிலையத்துறை ஆய்வு
அறநிலையத்துறையினர் ஆய்வின்போது 2014 முதல் இதுவரையிலான வரவு, செலவு கணக்குகள், 2014 முதல் நாளது தேதி வரையிலான தணிக்கை அறிக்கைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றுக்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து சமய அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விவரங்களும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications