லலித் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த மோடி சர்க்கார் தயங்குவது ஏன்?: கேட்பது ப.சிதம்பரம்
சென்னை: ஐ.பி.எல். நிதி முறைகேட்டில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய லலித் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த மோடி அரசு தயங்குவது ஏன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிள்ளார்.
லண்டனில் தலைமறைவாக உள்ள லலித் மோடிக்கு உதவியதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா ஆகியோர் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். ஆனால் லலித் மோடியோ, காங்கிரஸ் அரசு என்னை பழிவாங்கியது என்று விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
2010ல் அமலாக்கத்துறை பரிந்துரை காரணமாக லலித்மோடியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லலித்மோடி வெளிநாடு செல்ல முடியாத நிலை இருந்தது. அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு வருமாறு கூறியிருந்தது. அவர் விசாரணைக்கு வரமறுத்தார்.

இங்கிலாந்துக்கு அனுப்பிய கடிதம்
இதுதொடர்பாக இங்கிலாந்து அமைச்சரோடு பேச வேண்டும். இந்த பிரச்சனையை எழுப்ப வேண்டும் என்று அமலாக்கத்துறை என்னை கேட்டுக்கொண்டது. அதனைத்தொடர்ந்து இங்கிலாந்து அமைச்சரிடம் நான் பேசினேன். பிறகு கடிதம் எழுதினேன். அவர் பதில் எழுதினார். நான் மீண்டும் ஒரு கடிதம் எழுதினேன்.
அந்த கடிதத்தினுடைய சுருக்கம் என்னவென்றால், லலித்மோடி இந்திய குடிமகன். அவர் மீது விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. அவர் விசாரணைக்கு வரமறுக்கிறார். அவருடைய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அவர் வெளிநாட்டிற்கு பயணம் செய்வதோ, இங்கிலாந்தில் தங்கியிருப்பதோ, சட்டத்திற்கு புறம்பானது. அவரை உடனடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.

கடிதங்கள் வெளியிட மறுப்பு ஏன்?
பிறகு பாஸ்போர்ட் வழங்கிட அவருக்கு சாதகமாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் தீர்ப்பு அளித்தார்கள். அந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அரசு செல்லவில்லை. ஆக இந்த சூழ்நிலையில் பல கேள்விகள் எழும்புகின்றன. 7 கேள்விகளை நான் கேட்டிருக்கிறேன்.
இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், எனக்கும் இங்கிலாந்து அமைச்சருக்குமிடையே நடந்த கடித பரிவர்த்தனை இருக்கிறதே அந்த கடிதங்களையெல்லாம் வெளியிட வேண்டும். அந்த கடிதங்களை ஏன் அரசு மறைக்கிறது அல்லது வெளியிட மறுக்கிறது என்று எனக்கு புரியவில்லை. அந்த கடிதத்தை வெளியிட்டால் எந்த சூழ்நிலையிலே, எந்த காரணங்களுக்காக அந்த கடிதங்கள் எழுதப்பட்டது என்பது தெளிவாக தெரிந்துவிடும்.

எதற்காக பரிந்துரைத்தார்?
இரண்டாவது மனிதாபிமான முறையிலே ஒருவருக்கு உதவி செய்ய வேண்டும் என்றால், அவர் இந்திய குடிமகன், இந்திய ஹை கமிசனுக்கு செல்லுங்கள். அங்கு உங்களுக்கு தற்காலிகமாக ஒரு பயண அனுமதியை தருவார்கள் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். எதற்காக இங்கிலாந்து அரசு அவருக்கு தற்காலிக பயண அனுமதி தர வேண்டும் என்று இந்திய அமைச்சர் பரிந்துரை செய்ய வேண்டும்.

மேல்முறையீடு செய்யாதது ஏன்?
மூன்றாவது, பாஸ்போர்ட் ரத்து வழக்கில் இரு நீதிபதிகளை கொண்ட அமர்வு, அரசுக்கு பாதகமான தீர்ப்பு அளித்த பிறகு ஏன் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு சென்று முறையிடவில்லை. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்தது யார். எந்த சூழ்நிலையில் அந்த முடிவை எடுத்தார்கள். என்ன காரணங்களுக்காக அந்த முடிவை எடுத்தார்கள். இந்த 10 மாதங்களாக லலித்மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்த நரேந்திர மோடி அரசு என்ன முயற்சிகளை செய்திருக்கிறது. இந்த கேள்விகளுக்கெல்லாம் அரசு பதில் சொல்ல வேண்டும்.

விதிமீறிய சலுகை
நாளுக்கு நாள் புதிய புதிய செய்திகள் வருகின்றன. இதுவரை வந்த செய்திகளில் இருந்து, இது வேண்டிய ஒருவருக்கு செய்த சலுகை. விதிகளை மீறி செய்த சலுகை. தன்னுடைய அதிகார வரம்பை மீறி செய்யப்பட்ட சலுகை என்பது தெளிவாகிறது. இந்த சூழ்நிலையில்தான் நான் சார்ந்திருக்கக் கூடிய காங்கிரஸ் கட்சி, அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று கோரியிருக்கிறது. அதை நான் மீண்டும் சுட்டிக்காட்டுகிறேன். இந்த கேள்விகளுக்கெல்லாம் அரசு பதில் சொல்லும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
இந்திய தூதரகத்தை அணுகும்படி லலித்மோடிக்கு சுஷ்மா ஏன் அறிவுறுத்தவில்லை. லலித்மோடியை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு ஏன் வலியுறுத்தவில்லை. லலித்மோடிக்கு புதிய பாஸ்போர்ட் வழங்குவதற்கு முடிவு எடுத்தது யார்
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான கடித விவரங்களை மத்திய அரசு ஏன் வெளியிடவில்லை. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்ட நிலையில் லலித் மோடி எப்படி லண்டனில் தங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications