குழந்தை திருமணம்.. ஹேமசபேச தீட்சிதர் கைதுக்கு எதிராக போராடிய சிதம்பரம் தீட்சிதர்கள்.. தூக்கிய போலீஸ்
சிதம்பரம்: குழந்தை திருமண தடை சட்டத்தில் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நேற்று இரவு தீட்சிதர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் வைக்கப்பட்டது. கடந்த வருடம் தனது மகளுக்கு 17 வயதே இருக்கும் போது குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளார்.

சட்டப்படி இது குற்றம் என்று தெரிந்தும் அவர் திருமணம் செய்து வைத்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. விசாரணையில், 17 வயது சிறுமிக்கு இவர்கள் திருமணம் செய்து வைத்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பான ஆதாரங்களை சமூக நலத்துறை வெளியிட்டது. இதையடுத்து போலீஸ் நடத்திய விசாரணையிலும் குழந்தை திருமணம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டார்.
சிறுமியை திருமணம் செய்த ராஜரத்தின தீட்சிதர் கைது செய்யப்பட்டார். அதேபோல் திருமணத்தை நடத்தி வைத்த வெங்கடேஸ்வரா தீட்சிதர் என்பவரும் கைது செய்யப்பட்டார். தற்போது இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கு முன்பே இவர்கள் எத்தனை பேருக்கு குழந்தை திருமணம் செய்துள்ளனர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குழந்தை திருமண தடை சட்டத்தில் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நேற்று இரவு தீட்சிதர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
நேற்று இரவு தீட்சிதர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு போராட்டம் செய்தனர். சாலைகளில் பூசணிக்காய் உடைத்து தீட்சிதர்கள் போராட்டம் செய்தனர். ஹேமசபேச தீட்சிதரை விடுதலை செய்ய கோரி போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் அங்கே குவிக்கப்பட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஹேமசபேச தீட்சிதர் சட்டத்தை மீறி இருக்கிறார். இதற்கு கைது செய்யாமல் வேறு என்ன சலுகை கொடுக்க முடியும். நீங்கள் போராட்டம் செய்வது தவறு. கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் அவர்களிடம் அறிவுரை செய்தனர். ஆனால் போலீசார் அமைதியாக கொடுத்த அறிவுரைகளையும் கேட்காமல் தீட்சிதர்கள் அங்கேயே அமர்ந்து போராட்டம் செய்து கோஷம் எழுப்பினர். அதோடு அங்கு வந்த வாகனங்களையும் மறித்து இடையூறு செய்தனர்.
இந்த போராட்டம் காரணமாக அங்கே பெரிய அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அனுமதி இன்றி போராட்டம் செய்த தீட்சிதர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவர்களை அப்புறப்படுத்தி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்தனர்.












Click it and Unblock the Notifications